Published : 29 Oct 2025 02:47 PM
Last Updated : 29 Oct 2025 02:47 PM
சென்னை: போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபகாலமாக தினமும் பல்வேறு இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவிவருவது சமூகத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
பொது இடங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், அணுமின் நிலையங்கள் போன்ற இடங்களிலும் தனிப்பட்ட முறையில் நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போன்றவர்களுக்கும் இமெயில் மூலமாக போலி மிரட்டல்கள் விடுவது, பொதுமக்கள் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும் ஆபத்தான செயல் ஆகும். இத்தகைய போலி செய்திகள் பரப்புவர்கள்; செயல் கண்டிக்கத்தக்கது.
இத்தகைய பொய்யான தகவல்கள் பரப்புவது சமூகத்தில் குழப்பம் உண்டாக்கும் குற்றமாகும். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் தேவையற்ற சுமையைச் சந்திக்கின்றனர். மேலும், உண்மையான அவசர நிலைகளில் செயல்படுவதற்கு தாமதம் ஏற்படுகிறது. பாதுகாப்புக்காக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வை மதிக்காமல், அவசரக் கால சூழ்நிலையை போலியாக உருவாக்கும் இப்படிப்பட்ட செயல்கள் சட்டபூர்வமாகவும் ஒழுக்க ரீதியாகவும் ஏற்க முடியாதவை.
நிலவுக்கு ராக்கெட் விடும் அளவிற்கு தொழில்நுட்பம் பெற்றிருக்கிற இந்தியாவில் இவர்களை கண்டுபிடிப்பது சவாலான ஒன்றா? எனவே, இதுபோன்ற போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்கள் அனைவரும் இத்தகைய தகவல்களை நம்பாமல், அவை உண்மையா என உறுதி செய்யாமல் சமூக வலைதளங்களில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். பொது அறிவும் பொறுப்பும் மிக்க குடிமக்களாக, நாம் அனைவரும் சமூக அமைதியை குலைக்கும் போலி தகவல்களுக்கு இடமளிக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT