Published : 29 Oct 2025 05:54 AM
Last Updated : 29 Oct 2025 05:54 AM
சென்னை: ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை ஏழு பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 2021-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆவடியில் உள்ள, அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்டது.
இதனால் இந்த விவகாரம், தொழில் தகராறு சட்டப்படி சமரச பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மத்திய அரசின் முடிவை எதிர்த்து அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன் கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதுபோன்ற நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT