Published : 29 Oct 2025 06:22 AM
Last Updated : 29 Oct 2025 06:22 AM
சென்னை: மெட்ரோ ரயில் கதவுகளில் துணிகள் அல்லது பைகள் சிக்கிக் கொள்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க மெட்ரோ ரயில்களில் கதவுகளில் ‘ஆண்டி டிராக் ப்யூச்சர்’ என்னும் புதிய தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை நிறுவ, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது, 10 மி.மீ. தடிமன் அளவிலான துணி, பெல்ட் சிக்கினால்தான் சென்சாரில் பதிவாகும். புதிய தொழில்நுட்பத்தில் 0.3 மி.மீ. தடிமன் அளவிலான எந்தப் பொருள் சிக்கினாலும் சென்சார் உள்வாங்கும் என்பதால் விபத்துகள் ஏற்படாது. இதற்காக, ரூ.48.33 கோடியில் ‘பைவ்லி டிரான்ஸ்போர்ட் ரயில் டெக்னாலாஜிஸ் இந்தியா’ என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் மனோஜ் முன்னிலையில் நிறுவன தலைமை பொதுமேலாளர் ராஜேந்திரன், மற்றும் தனியார் நிறுவன இயக்குநர் புனீத் மெஹ்ரோத்ரா ஆகியோர் ஒப்பந்தத்தில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ ரயில்களின் அனைத்து பெட்டி கதவுகளிலும் ஆண்டிடிராக் தொழில்நுட்பம் நிறுவப்படும். இதன் சிறப்பு என்னவென்றால், இது இழுத்துச் செல்லும் விசையை கண்டறியும் திறன் கொண்டது. ஒரு நபர் அல்லது பொருள் கதவில் சிக்கிக்கொண்ட நிலையில் ரயில் நகரத் தொடங்கும்போது அது இழுக்கப்பட்டால், இந்த அமைப்பு அதைக் கண்டறியும்.
அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது, மெட்ரோ ரயில் தானாகவே அதன் அவசரகால பிரேக்கை போட்டு, மெட்ரோ ரயிலை உடனடியாக நிறுத்திவிடும். அதுமட்டுமின்றி, இது உடனடியாக ரயில் ஓட்டுநரின் பார்வைக்கு அனுப்பப்படும். இதன்மூலம் ஓட்டுநர் விரைவாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT