Published : 29 Oct 2025 06:39 AM
Last Updated : 29 Oct 2025 06:39 AM
சென்னை: கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை அழைத்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் அணியின் துணை கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்ட சென்னை கண்ணகி நகரைச்சேர்ந்த கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
போட்டி முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகாவை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து தென்சென்னை திமுக சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கார்த்திகாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதையடுத்து சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கார்த்திகாவை நேற்று அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரூ.1 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை கார்த்திகாவிடம் பழனிசாமி வழங்கினார்.
பின்னர் கார்த்திகா செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அழைத்து பேசி பாராட்டு தெரிவித்தார். இன்னும் உலகளவில் கண்ணகி நகரை கொண்டு செல்ல வேண்டும் என வாழ்த்தினார்.
கண்ணகி நகரில் இருந்து சர்வதேச அளவில் விளையாட செல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதையடுத்து சீனியர் ஆசிய விளையாட்டு போட்டிகள், உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்கவும் ஆர்வமாக உள்ளேன். எனக்கு அரசு வழங்கிய ஊக்கத் தொகையை கூடுதலாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பழனிசாமி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடா முயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகாவை அழைத்து வாழ்த்தினேன். அவர் மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து தமிழகத்துக்கும், இந்திய நாட்டுக்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் கபடி பயிற்சியாளர் கே.ராஜ், கபடி வீராங்கனை ஆர்.காவ்யா, சோழிங்க நல்லூர் மேற்கு பகுதி செயலாளர் டி.சி.கருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் கார்த்திகாவின் வெற்றியை பாராட்டி அவரை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் கார்த்திகாவிடம் மேயர் ஆர்.பிரியா நேற்று வழங்கினார். அப்போது கார்த்திகாவுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT