Published : 29 Oct 2025 06:20 AM
Last Updated : 29 Oct 2025 06:20 AM
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மழைநீர் தேங்கிய சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின்கீழ் பேருந்துகளை இயக்கக் கூடாது என ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் மோந்தா புயல் தீவிரம் அடைந்ததால் சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் கடந்த 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. அடுத்த 2 மாதங்கள் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சுரங்கப்பாதைகள், மேம்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும். காட்டாற்று ஓர சாலைகளில் பேருந்தை இயக்கும்போது கவனமாக வெள்ளத்தின் தன்மையை அறிந்து இயக்க வேண்டும்.
தண்ணீர் குறைவாக இருப்பதாகக் கூறி பயணிகள் பேருந்தை இயக்க சொன்னாலும் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும். பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும். பேருந்துகளில் பழுதுதொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என கண்காணித்தபடி கவனமாக இயக்க வேண்டும்.
பணிமனைகளில் உள்ள டீசல் பங்க் சேமிப்பு கிடங்கில் தண்ணீர் கலக்கவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும். இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்து புறப்பாடு குறித்து முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT