Published : 29 Oct 2025 06:15 AM
Last Updated : 29 Oct 2025 06:15 AM
சென்னை: நியாயமான விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் வருண்குமார், ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியவற்றவ27ர் என கடுமையாக விமர்சித்து சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும், ஐபிஎஸ் அதிகாரியான வருண்குமாருக்கும் இடையே கருத்து ரீதியாகமோதல்கள் ஏற்பட்டன.
இது தொடர்பாக வருண்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என சீமானுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சீமானுக்கு எதிராக ரூ.2.10 கோடி மான நஷ்டஈடு கோரி வருண்குமார் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சங்கர் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: ஐபிஎஸ் அதிகாரியான வருண்குமார் எனக்கு எதிராக தெரிவித்துள்ள புகார்கள் உண்மைக்கு புறம்பானவை. அவரது வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சியி்ல் இருந்தபோது பிரியதர்ஷினி என்பவருக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள அளவுக்கு அதிகமாக வரதட்சணை கேட்டதாக எழுந்த புகாரின்பேரில் வருண்குமாருக்கு எதிராக வரதட்சணை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அவர் ராமநாதபுரம் எஸ்பியாக பணியாற்றியபோது ட்விட்டரில் தனது சொந்த கருத்துகளை பதிவிட்டதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரின் நடத்தைகளுக்கு இந்த சம்பவங்களே சாட்சி.
வருண்குமார் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனது கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குகளை பதிவு செய்தார் என்பதற்காக, ஒரு காவல்துறை அதிகாரியாக அவரது செயல்பாடுகள் குறித்து மட்டுமே விமர்சிக்கப்பட்டது. தனிப்பட்ட எனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் விமர்சித்தது கிடையாது.
ஆனால் ஐபிஎஸ் அதிகாரியான வருண்குமார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு என்னையும், கட்சி நிர்வாகிளையும் தொடர்ந்து அவதூறாக விமர்சித்து வருகிறார். நியாயமான இந்த விமர்சனங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் ஐபிஎஸ் அதிகாரியாக பதவி வகி்க்கவே தகுதியவற்றவர். அவருக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை தேவைப்படும் நேரம் இது. எனவே, எனக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கோரியுள்ளார். அதையடுத்து விசாரணையை நவ.11-க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT