Published : 29 Oct 2025 08:44 AM
Last Updated : 29 Oct 2025 08:44 AM
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துவிட்டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்பதைப் போல முக்கியக் கட்சிகள் அனைத்தும் அதை ஒரு பிரதானப் பிரச்சினையாக பேசி வரும் நிலையில், “மாநில அந்தஸ்துக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை. மாநில அந்தஸ்து இருந்தால் தான் சிறப்பான ஆட்சி நடத்த முடியும் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது” என புதிதாக ஒரு கருத்தைப் பேசி இருக்கிறது புதுச்சேரி அதிமுக.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன், “மாநில அந்தஸ்தை அரசியலுக்காக எல்லோரும் பயன்படுத்துகின்றனர். முதல்வரும் பயன்படுத்துகிறார். மாநில அந்தஸ்து இல்லாமலேயே புதுச்சேரி நல்ல நிலைமைக்கு வரவில்லையா? ரங்கசாமி ஏற்கெனவே ஒருமுறை முதல்வராக இருந்தபோது, தான் அறிவித்த திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தினாரே... இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக புதுச்சேரி அப்போது இருந்ததே!
நேர்மையான முறையில் தொழில் புரிய அரசு துணையிருக்க வேண்டும். அந்த தொழிகள் மூலம் நியாயமான வரி வசூலைச் செய்ய வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். அனைத்துக்கும் மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசால் பல விதத்தில் புதுச்சேரி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மதுபான கொள்முதல், மதுபான விநியோகத்தை அரசே செய்தால் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் இதை ஏன் செய்யவில்லை?
இங்கு பல தனியார் மருத்துவக் கல்லூரிகள், பள்ளிகள் இருக்கின்றன. தனியார் பள்ளிகளை தொடங்குபவர்கள் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே கோடிகளுக்கு அதிபதியாகின்றனர். தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கும் இவர்களால் அரசுக்கு ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா? இதுபோன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் மாநில அந்தஸ்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? யாரை ஏமாற்றுகிறீர்கள்?” என்று ஆவேசக் கேள்வி எழுப்பினார்.
“அப்படியானால் வரும் தேர்தலில் மாநில அந்தஸ்து கோரிக்கையை அதிமுக முன்வைக்காதா?” என்று கேட்டதற்கு, “மாநில அந்தஸ்து பெறுவது என்பது அதிமுகவின் கொள்கை முடிவு. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, பிரதமர் வாஜ்பாயிடம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தினார். அதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதலும் கொடுத்தது.
ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில், புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு மத்தியில் இரண்டு முறை அமைந்த ஆட்சிகளிலும் திமுகவே தொடர்ந்தது. அவர்கள் மாநில அந்தஸ்து பற்றி மத்தியில் பேசவில்லை. தற்போதுள்ள அரசுக்கும் அழுத்தம் தரப்படவில்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாநில அந்தஸ்து பிரச்சினையை நாங்கள் வலியுறுத்துவோம். அதேசமயம், மாநில அந்தஸ்து இருந்தால் தான் சிறப்பான நிர்வாகத்தை தரமுடியும் என்பதை ஏற்க முடியாது” என்றார் அன்பழகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT