Published : 29 Oct 2025 09:48 AM
Last Updated : 29 Oct 2025 09:48 AM
முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியது, மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கக் கோரியது போன்ற முக்குலத்தோருக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் தென் மாவட்டத்தில் இழந்த வாக்கு வங்கியை மீட்கவும், பசும்பொன்னில் ஜெயலலிதா காலத்து முக்கியத்துவத்தை பெறவும் அதிமுக காய் நகர்த்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30-ல் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவும் 63-வது குருபூஜையும் நடக்கிறது. இந்த விழாவுக்கும், அதிமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 2014-ல் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தேவரின் தங்கக் கவசத்தை வழங்கினார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் அதிமுகவிலிருந்து வெளியேற்றம், தலைமை மாற்றம் போன்றவற்றை வைத்து அதிமுக முக்குலத்தோருக்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். அதை மாற்றி முக்குலத்தோருக்கு எப்போதும் இணக்கமான கட்சிதான் அதிமுக என்ற நிலையை ஏற்படுத்த இபிஎஸ் தரப்பில் முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதன் ஒருபகுதியாகவே ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கினார் இபிஎஸ். ஆனாலும் இபிஎஸ் பசும்பொன்னுக்கு வரும்போதெல்லாம் சில எதிர்ப்புகள் கிளம்புவதும், அதை அதிமுகவினர் சமாளித்து அரசியல் செய்வதும் தொடர்கிறது.
இந்த அரசியல் போராட்டத்திற்கு இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியோடு முற்றுப்புள்ளி வைக்க அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ மற்றும் அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோரை களத்தில் இறக்கி இருக்கிறார் இபிஎஸ். வழக்கமான சிக்கல்கள் ஏதும் இல்லாமல் இம்முறை இபிஎஸ்ஸுக்கு பசும்பொன்னில் பழைய முக்கியத்துவம் கிடைக்க வைப்பதற்கான வேலைகளை இம்மூவரும் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், “முத்துராமலிங்கத் தேவருக்கு இதுவரை யாருமே கேட்காத பாரத ரத்னா விருதை வழங்க இபிஎஸ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரடியாக சந்தித்து வலியுறுத்தினார். மதுரை விமான நிலையத்திற்கும் அவரது பெயரை வைக்கவும் கூறியுள்ளார்.
இவ்விரண்டு விஷயத்தையும் இனி யார் கேட்டாலும் அது அதிமுகவின் கோரிக்கையாகவே இருக்கும். இந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு வரும் இபிஎஸ்ஸுக்கு அளிக்கப்படும் வரவேற்பின் மூலம் நாங்கள் அதிமுக பக்கம் தான் இருக்கிறோம் என்பதை தேவரின மக்கள் உணர்த்துவார்கள்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT