Published : 29 Oct 2025 06:07 AM
Last Updated : 29 Oct 2025 06:07 AM

மாமல்லபுரத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதார் விஜய்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகவல்

உள்படம்: ஆனந்தஜோதி, சக்திவேல்

கரூர்: தவெக தலைவர் விஜய் தங்களிடம்மன்னிப்பு கேட்டதுடன், காலில் விழுந்து கதறி அழுததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். கரூர் சம்பவத்தில் உயிர் இழந்த நபர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 7 ஆம்னி பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் விடுதிக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், அனைவரும் பேருந்துகள் மூலம் நேற்று அதிகாலை கரூர் வந்தடைந்தனர். கூட்ட நெரிசலில் மனைவி ஹேமலதா, மகள்கள் சாய்லக் ஷனா, சாய்ஜீவா ஆகியோரை இழந்த, கரூர் சிவசக்தி நகர் ஆனந்தஜோதி கூறியதாவது: விஜய் எங்களை சந்தித்தபோது, ‘என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மன்னித்து விடுங்கள்’ என்று கூறி, என் தாய் கிருஷ்ணவேணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

‘உங்களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்து தருகிறேன்’ என்றார். ‘குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று கூறியபோதும், குழந்தைகள் உங்களைக் காணவேண்டும் என்ற ஆசையால் அழைத்து வந்துவிட்டோம்’ என்று கூறி, அவரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டோம்.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய எனது மகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாலும், அங்கு சிகிச்சை அளிக்கத் தாமதமானதாலும் இறந்துவிட்டதாக விஜய்யிடம் தெரிவித்தோம். அதற்கு அவர் ‘சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் போது இதை தெரிவியுங்கள்’ என்று கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி பிரியதர்ஷினி, மகள் தரணிகா ஆகியோரைப் பறிகொடுத்த கரூர் ஏமூர்புதூரை சேர்ந்த சக்திவேல் (55) கூறும்போது, “நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு, நடிகர் விஜய் எனது காலில் விழுந்து கதறி அழுதார். ‘என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து, உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். கரூருக்கு நேரில் வர முடியாத தற்கு மிகவும் வருந்துகிறேன். கரூருக்கு வரும்போது அனைவரையும் சந்திக்கிறேன்’ என்று கூறினார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x