Published : 28 Oct 2025 12:41 PM
Last Updated : 28 Oct 2025 12:41 PM
கோவை: கோவையில்தான் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், இதைக் கூறுவதில் பெருமை கொள்வதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்குச் சென்ற சி.பி.ராதாகிருஷ்ணன், அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு இன்று கோவை வந்தடைந்தார். குடியரசு துணைத் தலைவரான பின் முதன்முறையாக தமிழகம் வந்த அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கோவை கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் அமைப்பினர் ஒன்றிணைந்து 'கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்' சார்பில் பாராட்டு விழாவை நடத்தினர்.
விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், "எனது பொது வாழ்க்கையை நான் கோவையில்தான் தொடங்கினேன். இதை கூறுவதில் பெருமை கொள்கிறேன். நாடு உயர்ந்தால் தான் நாம் வளர முடியும். விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம்.
தென்னை நார் வாரியத்தின் (Coir Board) தலைவராக என்னை நம்பி பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பை ஒப்படைத்தார். அத்துறையில் நான் செய்த சாதனையைப் பார்த்து மேலும் ஓராண்டு பொறுப்பை நீட்டித்தார். அதனைத் தொடர்ந்து ஆளுநராக நியமிக்கப்பட்டேன். ஒரே நேரத்தில் முன்று மாநிலங்களுக்கு ஆளுநராகப் பணியாற்றினேன். தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநில ஆளுநராக பணியாற்றினேன்.
தற்போது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். முயற்சி நம்முடையது; முடிவு இறைவனுடையது என்றுதான் நான் பார்க்கிறேன். கோவை விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு உதவுவேன்.” என்று தெரிவித்தார்.
'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன், சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம், கே.ஜி.குழுமத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜேஷ் லுந் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
இன்று மாலை கோவையிலிருந்து திருப்பூர் புறப்பட்டுச் செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்குள்ள திருப்பூர் குமரன் மற்றும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். நாளை (அக்.29) திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், பின்னர் மதுரை செல்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் வழிபாடு செய்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (அக்.30) ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT