Published : 28 Oct 2025 12:05 PM
Last Updated : 28 Oct 2025 12:05 PM
மதுரை: வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின் 3(2)(ஐ) இந்த பிரிவின் படி பட்டியலின அல்லது எஸ்சி, எஸ்டி பிரிவை சாராத ஒரு நபர், வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்திற்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மரண தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும், மேலும், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்தச் சட்டப்பிரிவின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கறிஞர் ஜெகன் தரப்பில், இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT