Published : 28 Oct 2025 06:57 AM
Last Updated : 28 Oct 2025 06:57 AM
சென்னை: கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இதுவரை 48 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.
அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதற்கு மாற்றாக, சுமார் ரூ.1,600 கோடியில் அதிநவீன சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்காக, ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதில் விண்கலம் பொருத்தப்பட்டுள்ளது. பின்னர், ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்ட சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்டதிலேயே இதுதான் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.
இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உட்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய கடற்படை மற்றும் ராணுவத்தின் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. கடலோர எல்லைகளை கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள், விமானங்கள் இடையே பாதுகாப்பான தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தியும் வழங்கும்.
ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கம். இந்த திட்டம், எல்விஎம்-3 ராக்கெட்டின் 5-வது ஏவுதல் ஆகும். இதற்கு முன்பு, சந்திரயான்-3 விண்கலம் இந்த ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT