Published : 28 Oct 2025 05:53 AM
Last Updated : 28 Oct 2025 05:53 AM
சென்னை: கேளிக்கை பூங்காக்களில் பெருஞ்சக்கரங்கள், பயணியர் விசைச் சக்கரங்கள் இயக்குவதற்கு, இந்திய தர நிர்ணய கழகத்தின் தரச்சான்றிதழை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருஞ்சக்கரம், பயணிகள் விசைச் சக்கரம் (Giant/Ferris wheels) என்பது மக்களுக்கு மகிழ்வூட்டும் மிகப் பெரிய கட்டமைப்புகளாகும். இவை கேளிக்கை பூங்காக்கள் போன்ற இடங்களில் மட்டுமின்றி, கோயில் திருவிழாக்கள் மற்றும் பொருட்காட்சி போன்ற தற்காலிக அமைப்புகளிலும் இயக்கப்படுகின்றன.
அண்மையில், பெருஞ்சக்கரம் உள்ளிட்ட கேளிக்கை இயந்திரங்களில் சில விபத்து தகவல்கள் பதிவாகியுள்ளன. எனவே, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஒருங்கிணைந்த பாதுகாப்பு வழிகாட்டுதல் தேவையாக உள்ளதை கருத்தில் கொண்டு, விபத்துக்களை தடுப்பதற்காக நிலையான அமைப்பு மற்றும் தற்காலிக அமைப்புகளின் பெருஞ்சக்கரம், கேளிக்கைப் பூங்கா நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்திய தரநிர்ணய கழக அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு பெருஞ்சக்கரம், பயணிகள் விசைச் சக்கரம் இயக்கத்திற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, கடந்த செப். 29-ம் தேதி வெளியிட்டது.
எனவே, இந்த அரசாணை வெளியிடப்பட்ட ஆறு மாதத்துக்குள் தற்போது இயங்கிவரும் கேளிக்கை பூங்காக்கள் நிலையான அமைப்புகளில் பெருஞ்சக்கரம், பயணிகள் விசைச் சக்கரம் இயக்குவதற்கு இந்திய தர நிர்ணய கழகத்தின் தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சான்றிதழை இணையவழியில் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையுடன் இணைந்து செயல்படுத்துமாறு சுற்றுலா துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT