Published : 28 Oct 2025 09:36 AM
Last Updated : 28 Oct 2025 09:36 AM
கும்பகோணம் தொகுதியில் அதிமுகவும் அதன் கூட்டணியும் எப்படி தொடர்ச்சியாக ஆறுமுறை தோற்று அசந்து போனதோ அதேபோல் குமாரபாளையம் தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை திமுக தோற்றுவிட்டு நிற்கிறது. இதற்கும் காரணம், உள்ளடி வேலைகள் தான். இம்முறையும் அப்படி ஏதாவது நடந்து அசிங்கப்பட்டு நின்றுவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதையில் இருக்கும் திமுக, வாய்ப்பு அமைந்தால் குமாரபாளையத்தை கொமதேகவுக்கு தந்துவிடும் யோசனையிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
குமாரபாளையத்தை தொடர்ச்சியாக திமுக கோட்டை விட்டதற்கு உள்ளடி மட்டுமல்லாது அதிமுக வேட்பாளராக களமிறங்கி வரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஒரு காரணம். கடந்த 2006-ல் திருச்செங்கோடு தொகுதியில் தங்கமணி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் மத்திய இணையமைச்சரும் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட செயலாளருமான செ.காந்திச்செல்வனை நிறுத்தியது திமுக. இருவருக்குமான போட்டி இழுபறியாக இருந்த நிலையில், காந்திச்செல்வன் 116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
2011 தேர்தலில் குமாரபாளையம் தொகுதி புதிதாக உதயமானது. அது தனது சொந்தத் தொகுதியாக இருந்ததால் அந்தத் தேர்தலில் குமாரபாளையத்துக்கு மாறிய தங்கமணி, தன்னை எதிர்த்து திமுக நிறுத்திய வெப்படை சி.செல்வராஜை சுமார் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அடுத்த தேர்தலிலும் குமாரபாளையத்திலேயே களம் கண்ட தங்கமணி, தன்னை எதிர்த்து நின்ற பள்ளிபாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பி.யுவராஜை சுமார் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கடந்த தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக குமாரபாளையத்தில் போட்டியிட்ட தங்கமணி, திமுகவைச் சேர்ந்த பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி தலைவர் மு.வெங்கடாசலத்தை சுமார் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆக, தொடர்ச்சியாக நான்கு முறை வென்று சாதனை படைத்திருக்கும் தங்கமணி, அடுத்ததாக ஐந்தாவது வெற்றியை எப்படி அடையலாம் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர், “தங்கமணிக்கு எதிராக நிறுத்தப்படும் திமுக வேட்பாளர்கள் தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டே வரக் காரணம் திமுகவினரே தான். திருச்செங்கோட்டில் முதல்முறையாக தங்கமணி போட்டியிட்டபோது பார்டரில் தான் காந்திச்செல்வன் தோற்றுப் போனார்.
எப்போதுமே திமுக அணிக்குத்தான் தபால் வாக்குகள் சாதகமாக இருக்கும். ஆனால், அந்தத் தேர்தலில் குமாரபாளையத்தில் தபால் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக அமையாததே தோல்விக்கு காரணம் என்றார்கள். திருச்செங்கோடு நகர திமுகவினர் செய்த உள்குத்து வேலைகள் தான் அதற்கு முக்கியக் காரணம் என அப்போது வெளிப்படையாகவே பேச்சு வந்தது. அங்கு தான் அப்படி என்றால் அடுத்தடுத்த தேர்தல்களில் குமாரபாளையத்திலும் அதே உள்குத்து பாலிடிக்ஸ்தான் நடக்கிறது.
கடந்த முறை தங்கமணியிடம் தோற்ற வெங்கடாசலம் தன்னை வீழ்த்த திமுகவினர் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை கட்சித் தலைமையிடம் புட்டுப் புட்டு வைத்து கண் கலங்கினார். உள்குத்து வேலைகள் மட்டுமல்லாது, இங்கிருக்கும் சிலர் தங்கமணி தரப்பிடம் விலை போவதும் தேர்தலுக்குத் தேர்தல் சர்வசாதாரணமாய் நடக்கிறது.
இந்த முறை அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக மண்டலப் பொறுப்பாளரான செந்தில்பாலாஜி மூலம் சில மூவ்களை எடுத்து வருகிறது தலைமை. இதற்கு நடுவில் தான், தோல்வியைத் தவிர்க்க தொகுதியை இம்முறை தலைமை கொமகதேகவுக்கு கொடுத்தாலும் கொடுத்துவிடலாம் என்று எங்கள் தரப்பில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT