Published : 28 Oct 2025 06:21 AM
Last Updated : 28 Oct 2025 06:21 AM
சென்னை: மின் பெட்டிகளின் உயரத்தை அதிகரிக்கும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும் என மின் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமையகத்தில் மின் வாரிய கழகங்களுக்கு இடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஏதேனும் விடுப்பட்டிருந்தால் அவற்றை முடிக்க அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும். புதைவடங்கள் வெளிப்பட்டு இருந்தால் அதனை கண்காணித்து சரி செய்ய வேண்டும்.
போதிய அளவில் மின் சாதனங்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த மழைக்காலத்தில் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக பொதுமக்கள் மற்றும் மின் வாரிய பணியாளர்கள் மின் விபத்துகளால் உயிரிழப்பு என்பது இருக்க கூடாது.
இவை தவிர பணியாளர் தேவை மற்றும் மனிதவள செயல்முறைகள், சட்ட விவகாரங்கள், நுகர்வோர் சேவை மற்றும் குறைதீர் வழிமுறைகள், அறிவிப்புகள், திட்டங்கள் கண்காணிப்பு மற்றும் நிதி முன்னேற்றம், மின் உற்பத்தி, தடையில்லா மின் விநியோகம், பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் அனீஸ் சேகர், மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், இணை மேலாண் இயக்குநர் விஷு மஹாஜன், மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குநர் சிவகுமார், அனைத்து இயக்குநர்கள் மற்றும் தலைமையக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT