Published : 28 Oct 2025 05:38 AM 
 Last Updated : 28 Oct 2025 05:38 AM
சென்னை: சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவி செய்வதற்காக 215 இடங்களில் வெள்ள நிவாரண மையங்கள் இயங்கி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கும் வகையில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புகாருக்கு `1913' அழைக்கலாம்: மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 2000-க்கு மேற்பட்ட மோட்டார் பம்புகள் ஆங்காங்கே தயார் நிலையில் உள்ளன. 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழை வெள்ளம் காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 150 இணைப்புகளுடன் கூடிய ‘1913’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இந்த புகார்கள் மீதும், சமூக ஊடகங்களில் வரும் புகார் மீதும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியத்தின் 2,149 களப்பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT