Published : 28 Oct 2025 05:37 AM
Last Updated : 28 Oct 2025 05:37 AM
மதுரை: மதுரையில் சாக்கு மூட்டையுடன் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சத்தை, வீட்டுவேலை செய்யும் பெண் ஒருவர் மீட்டு, போலீஸில் ஒப்படைத்தார். அவரை போலீஸார், பொதுமக்கள் பாராட்டினர். மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்தவர் செல்வமாலினி(46), வீட்டுவேலை பார்க்கும் இவர் கோயில்களில் உழவாரப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு மதுரை மாட்டுத்தாவணியிலுள்ள ஜவுளிக்கடைக்கு சென்றிருந்ததனது சகோதரி மகன், மகளை அழைக்க சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார்.
அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டபோது வக்கீல் புதுத்தெரு சந்திப்பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்ததைக் கண்டார். இதனை ஓரமாக தள்ளிவிட முயன்றபோது, மூட்டையில் ரூ.500 பணக்கட்டு இருப்பது தெரிந்தது. பின்னர் அந்தப் பண மூட்டையை காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்ல முயன்றபோது, ரோந்து பணியில் இருந்த போலீஸார் எதிரே வந்தனர். இதனால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
விளக்குத்தூண் காவல் நிலையத்துக்கு பணமூட்டையைக் கொண்டுவந்து போலீஸார் பிரித்துப் பார்த்தபோது அதில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.17.49 லட்சம் இருந்தது. அதைத் தொடர்ந்து, வக்கீல் புதுத் தெருவிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைச் சேகரித்தும், செல்வமாலினியை அழைத்தும் போலீஸார் விசாரித்தனர்.
இதற்கிடையே, அந்தப் பணத்துக்கு உரிமை கொண்டாடி ஒருவர் காவல் நிலையத்துக்கு வந்தார். அவர் கேரளாவைச் சேர்ந்த பேட்டரி வியாபாரி என்றும், வாகனத்தில் பணத்தைக் கொண்டு சென்றபோது, தவறவிட்டதாகவும் கூறினார். அதன் உண்மைத் தன்மை குறித்து போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் அவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என, காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தெரிவித்தார். சாலையில் கிடந்த பணத்தை மீட்டு போலீஸில் ஒப்படைத்த செல்வமாலினியை போலீஸாரும், பொதுமக்களும் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT