Published : 28 Oct 2025 01:10 AM
Last Updated : 28 Oct 2025 01:10 AM

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்

கோப்புப் படம்

மாமல்லபுரம்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரிஉள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கரூரில் கடந்த செப்-27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் 2 பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று காலை 8.15 மணிக்கு தவெக தலைவர் விஜய் விடுதிக்கு வந்து, உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் உயிரிழந்த அஜிதா என்ற கல்லூரி மாணவியின் குடும்பத்தில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை. ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து சுமார் 5 நிமிடம் பேசி ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

கண்ணீர்மல்க மன்னிப்பு: கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அனைவரிடமும் விஜய் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறியதாகவும் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு தவெக சார்பில் வழங்கப்படும் என்றும் விஜய் உறுதி அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ஆதவ் அர்ஜூனா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அனைவரும் மீண்டும் இரண்டு பேருந்துகள் மூலம் கரூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியின்போது, விடுதி வளாகத்தில் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

விடுதி முழுவதும் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக, நெரிசலில் சிக்கி உயிழந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகனின் தந்தை கந்தசாமியை பவுன்சர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், விடுதி வளாகத்துக்கு வெளியே அவர் நீண்ட நேரம் காத்திருந்தார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் அவரிடம் பேசி, விடுதிக்குள் அழைத்துச் சென்றனர்.

நிர்வாகிக்கு அனுமதி மறுப்பு: நிகழ்ச்சி நடந்த மாமல்லபுரம் விடுதிக்கு தவெக பொருளாளர் வெங்கட்ராமன் காரில் வந்தார். வாயிலில் அவரது காரை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். உள்ளே செல்ல வேண்டும் என்று கூறியும், பவுன்சர்கள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால், காரில் அமர்ந்து தொடர்ந்து ஒலி (ஹார்ன்) எழுப்பிக் கொண்டிருந்தார். இதையடுத்து, விடுதிக்குள் இருக்கும் நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதன் பேரில் அவர்கள் வந்து வெங்கட்ராமனை உள்ளே அழைத்துச் சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x