Published : 28 Oct 2025 12:44 AM
Last Updated : 28 Oct 2025 12:44 AM
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) இன்று தொடங்குவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு,தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, எஸ்.ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் .வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக எம்.பி. ரவிக்குமார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், எஸ்ஐஆர் திட்டத்துக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை விவரம்: பிஹாரில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிர திருத்தம், உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான சதியாக மட்டுமே அமைந்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த பணி நவம்பர், டிசம்பரில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்துவரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பெரும் பணிகளைச் செய்வது சிரமம். வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை அவசர, அவசரமாக செய்யக்கூடாது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள்எதிர்க்கிறோம். இதன்மூலம் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித் திட்டம் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.
இது தமிழகத்துக்கான பிரச்சினை. எனவே, அனைத்து அரசியல் இயக்கங்களும் இதை கூர்ந்து கண்காணித்து தடுக்க வேண்டும். இதையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னையில் நவம்பர் 2-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT