Published : 27 Oct 2025 06:36 PM
Last Updated : 27 Oct 2025 06:36 PM
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்களை, தவெக தலைவர் விஜய், மாமல்லபுரம் ஓட்டலில் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பேருந்துகளில் தவெகவினர் அழைத்துச் சென்றனர்.
இதில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த தொக்குப்பட்டி புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அஜிதா (21) குடும்பத்தினர் சென்னை செல்லவில்லை. இதுகுறித்து அஜிதாவின் சகோதரர் அமர்நாத்திடம் கேட்டபோது, ‘விருப்பமில்லாததால் செல்லவில்லை’ என்றார்.
இதேபோல, ஏமூர் புதூரைச்சேர்ந்த பிருத்திக் (10) குடும்பத்தினரும் செல்லவில்லை. இவரது தந்தை பன்னீர்செல்வம்தான், சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அவர் தங்கள் குடும்பத்தை விட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டதாகவும், பணத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் சிறுவனின் தாய் சர்மிளா குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை சந்திக்கச் செல்லாதது குறித்து சர்மிளாவின் சகோதரர் சந்துருவிடம் கேட்டபோது, ‘சகோதரி சர்மிளா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உடல் நிலை சரியில்லாததால் செல்லவில்லை’ என்றார்.
மேலும், கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த வடிவழகன் என்ற வடிவேல் குடும்பத்தினரும் மாமல்லபுரம் செல்லவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது, ‘‘வடிவேலுக்கு 30-ம் நாள் படைத்ததால் செல்லவில்லை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT