Published : 27 Oct 2025 05:38 AM
Last Updated : 27 Oct 2025 05:38 AM
சென்னை: அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் 2 நாட்களில் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து திருவாரூர், விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்.19-ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து, அம்மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த கடந்த அக்.21-ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை கடந்த 24-ம் தேதி பார்வையிட்ட முதல்வர், முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி படிப்படியாக இயந்திரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, தற்போது 14 பொக்லைன் இயந்திரங்கள், 4 ஜேசிபி இயந்திரங்களுடன் அடையாறு ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மண் திட்டுகளை அகற்றி அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
200 மீட்டர் அகலம்: இந்நிலையில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை நேற்று மீண்டும் முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது ஏற்கெனவே முகத்துவாரத்தை 150 மீட்டர் அகலப்படுத்த அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது 200 மீட்டர் அகலத்துக்கு விரைந்து தூர்வார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொண்டு 2 நாட்களுக்குள் பணிகளை நிறைவுசெய்ய உத்தரவிட்டார். இதையொட்டி நீர்வளத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பணிகளை விரைவுபடுத்த கூடுதலாக களப் பொறியாளர்களை ஈடுபடுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இத்துடன் கூவம், முட்டுக்காடு, எண்ணூரில் கொசஸ்தலையாறு ஆகிய பகுதிகளிலும் உள்ள முகத்துவாரப் பகுதிகளையும் தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், தலைமைப்பொறியாளர் பொதுப்பணி திலகம், நா.எழிலன் எம்எல்ஏ, மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரஷூல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT