Published : 27 Oct 2025 07:30 AM
Last Updated : 27 Oct 2025 07:30 AM
தஞ்சாவூர் / திருச்சி/ புதுக்கோட்டை: தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பத்தை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம், தமிழக அரசு அனுமதி கேட்டது.
இதையடுத்து, ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு 3 குழுக்களை அமைத்தது. இக்குழுவைச் சேர்ந்த பி.கே.சிங், ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர் தஞ்சாவூர் அருகே ஆலக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
ஆய்வுக் குழுவினரிடம் விவசாயிகள், “ஒவ்வோர் ஆண்டும் மத்தியக் குழு தமிழகத்தில் ஆய்வு செய்தாலும், மத்திய அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வருவதில்லை. எனவே, ஈரப்பதம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமே மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், தற்போது மத்தியக் குழுவினர் மேற்கொண்டுள்ள ஆய்வு தொடர்பான அறிக்கையை உடனடியாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்” என்றனர்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தஞ்சாவூர் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, மத்தியக் குழுவினர் ராராமுத்திரை கோட்டை, தெலுங்கன் குடிக்காடு, கீழ கோவில் பத்து உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி வேலாயுதபுரம் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக் குழுவைச் சேர்ந்த ராஜ்கிஷோர் சாஹி, ராகுல் சர்மா, தனிஜ் சர்மா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மத்தியக் குழுவினர் காலணிகளுடன் நெல் குவியல் மீது ஏறி நின்று ஆய்வு செய்ததால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். மேலும், காய்ந்த நெல்மணிகளை பரிசோதனைக்கு சேகரித்ததாக மத்தியக் குழுவினர் மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, பூவாளூர், கோமாகுடி, கொப்பாவளி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதே குழுவினர், புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை, பந்துவாக்கோட்டையில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்குச் சென்று, நெல் மணிகளின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். குழுவினர் உரிய நேரத்துக்கு வராமல், இரவில் வந்து ஆய்வு செய்ததும், காலணியைக் கழற்றாமல் நெல் குவியலில் ஏறியதும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆய்வின்போது, எம்எல்ஏ எம்.சின்னதுரை, ஆட்சியர் எம்.அருணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT