Published : 27 Oct 2025 12:30 AM
Last Updated : 27 Oct 2025 12:30 AM
சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்கள் அபினேஷ் மற்றும் கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் அமைந்துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் கடந்த அக்.19 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. வரலாற்றில் முதல்முறையாக கபடி விளையாட்டு இந்த போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன் சுற்றுப்போட்டி தொடரில் 7 நாடுகள் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேற 7 அணிகளும் ரவுண்ட் ராபின் வடிவத்தில் போட்டியிட்டன. இதில் ஆண், பெண் இரு பிரிவுகளிலும் இந்தியா முதலிடத்தை பிடித்தது. இந்திய அணியின் வெற்றிக்கு தமிழகத்தின் திருவாரூரைச் சேர்ந்த கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ் (ஆண்கள் பிரிவு) மற்றும் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா ரமேஷ் (பெண்கள் பிரிவு) ஆகியோர் முக்கிய காரணமாக திகழ்ந்தனர். இதில் கண்ணகி நகர் கார்த்திகா, தேசிய அளவிலான கேலோ இந்தியா உள்ளிட்ட போட்டிகளில் மொத்தம் 11 முறை தமிழகத்துக்காக விளையாடி அதில் 8 பதக்கங்களை வென்றவர். இளையோர் பெண்கள் இந்திய கபடி அணியின் துணை அணித் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
இவர்களின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், சென்னை திரும்பிய இருவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து முதல்வரின் உத்தரவின்படி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.15 லட்சமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து கூடுதலாக ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, பயிற்சியாளர்கள்மா.ராஜேஷ், மா.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழகம் பெருமை கொள்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “கண்ணகி நகர் கார்த்திகாவிடம், கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, ‘உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?’ என்று கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாக புன்னகையோடு சொன்னார்.
கார்த்திகா மற்றும் அபினேஷ் ஆகியோர் மேலும் சில உதவிகளை என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம். பைசன் திரைப்படத்தில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழகம் பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT