Published : 26 Oct 2025 04:24 PM
Last Updated : 26 Oct 2025 04:24 PM
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுமானால் அதனை திமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற பிஹார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 லட்சத்தக்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் அதே குறுக்குவழியைப் பின்பற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக்கணக்காகத்தான் ஆகும்.
S.I.R. முறையைக் கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை தி.மு.கழகத்திற்கு உண்டு" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT