Published : 26 Oct 2025 05:12 PM
Last Updated : 26 Oct 2025 05:12 PM
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் 69 கவுன்சிலர்கள் இருந்தும், ஆளுங்கட்சியான திமுகவால் இன்னும் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர், தினமும் வார்டு விசிட், குப்பை பராமரிப்பு என்று மேயரின் அதிகாரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது உள்ளூர் திமுகவினரை கொதிப்படைய செய்துள்ளது.
மதுரை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த இந்திராணி, சொத்துவரி முறைகேட்டில் கணவர் பொன்வசந்த் சிக்கியதால் பதவியை இழந்தார். மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக திமுக 69 கவுன்சிலர்களை வைத்துள்ளது. ஆனால் இந்திராணிக்கு மாற்றாக, தற்போது வரை புதிய மேயரை திமுகவால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. புதிய மேயரை தேர்ந்தெடுப்பதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர திமுக செயலாளர் தளபதி ஆகியோரிடம் ஒற்றுமை ஏற்படாததால் கட்சித்தலைமை மேயர் நியமனத்தை தள்ளிப்போட்டுள்ளது.
மாற்றுக்கட்சியை சேர்ந்தவர் அதிகாரத்துக்கு வந்தாலும் பரவாயில்லை, சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் வராமல் இருந்தால் சரி என்ற திருப்தியில் உள்ளூர் திமுகவினர் இருந்தனர். அந்தளவிற்கு ஒரே கட்சியினரிடையே காழ்ப்புணர்ச்சி நிலவுகிறது.
இந்நிலையில் துணை மேயர் நாகராஜன், தற்போது பொறுப்பு மேயராக, மேயருக்கான அதிகாரங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார். மதுரையில் தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மழைநீர் தேங்கும் இடங்கள், குப்பை குவிந்து கிடக்கும் இடங்கள், மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்து அதிகாரிகளை முடுக்கி விட்டு வருகிறார். பெயருக்கு செயல்படுவார் என்று பார்த்தால் மேயராகவே மாறிவிட்டாரே என்று உள்ளூர் திமுகவினர் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
கனமழையால் வைகை அணை நீர்மட்டம் உயர தொடங்கியதும் துணை மேயர் நாகராஜன், மதுரை மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க உத்தரவிடுமாறு ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். இதனால் மாநகராட்சி நிர்வாகத்தில் துணை மேயர் பேச்சை கேட்பதா? உள்ளூர் திமுகவினர் பேச்சை கேட்பதா? என மாநகராட்சி அதிகாரிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் திமுக மூத்த கவுன்சிலர்கள் கூறுகையில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு வார்டுகளில் மதிப்பில்லாமல் போய் விட்டது. ஆட்சியும், மாநகராட்சியில் பெரும்பான்மையும் இருந்தும் எங்கள் வார்டுகளுக்குக்கூட இனி மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் துணை மேயரிடம் போய் நிற்க வேண்டிய நிலையை கட்சித் தலைமை எங்களுக்கு ஏற்படுத்திவிட்டது. மாநகராட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்துள்ளதால் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேயர் மாற்றத்தை ஒருபுறம் அதிமுகவினர் எங்களுக்கு கிடைத்த வெற்றி என்கின்றனர். மற்றொருபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 கவுன்சிலர்களை வைத்துக்கொண்டு மாநகராட்சி நிர்வாகம் எங்களுடையது என்கின்றனர். 69 கவுன்சிலர்களை வைத்திருந்தும் நாங்கள் மண்டலத் தலைவர்களாகவும், மேயராகவும் முடியவில்லை. கட்சித் தலைமையால் நேரடியாக ஒரு மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லையா? என்ற கெட்ட பெயர் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைமை திணறுவதைப் பார்த்து எங்களுக்கே அரசியல் செய்ய வெறுப்பாக உள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT