Published : 26 Oct 2025 01:20 PM
Last Updated : 26 Oct 2025 01:20 PM

10 அடிக்கு மண்ணுக்குள் புதைந்த 2 மாடி வீடு - திருச்சியில் மராமத்து பணியின்போது அதிர்ச்சி

திருச்சி கீழரண் சாலை பகுதியில் 10 அடி ஆழத்துக்கு மண்ணில் புதைந்த வீடு - படம்:ர.செல்வமுத்துகுமார்.

திருச்சியில் மராமத்துப் பணி மேற்கொண்டிருந்தபோது 2 மாடி வீடு 10 அடி ஆழத்துக்கு மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட் பாபு சாலை, சுகதாஸ் மண்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(49). கார் நிறுவன ஊழியர். இவர், அதே பகுதியில் பாரதியார் தெருவில் உள்ள நரசிம்மன் என்பவருக்கு சொந்தமான 40 ஆண்டுகள் பழமையான 1,000 சதுர அடி பரப்பளவுடைய 2 மாடி கொண்ட ஒரு வீட்டை அண்மையில் விலைக்கு வாங்கினார்.

இந்த வீட்டின் 2 மாடிகளும் கான்கிரீட் கட்டிடமாக இருந்த நிலையில், வீட்டின் தரைத்தளம் மட்டும் செம்மண் கட்டிடமாக இருந்ததால், அந்த கட்டிடத்தை திடப்படுத்துவதற்கான மராமத்துப் பணிகளை முருகானந்தம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று கட்டிடத் தொழிலாளர்கள் 3 பேர் பணியில் இருந்தனர். பிற்பகல் 1.30 மணியளவில் 3 பேரும் பணியை நிறுத்திவிட்டு, உணவு உண்பதற்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது, திடீரென அந்த வீட்டின் தரைத்தளம் 10 அடி ஆழத்துக்கு மண்ணுக்குள் புதைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தநேரத்தில், அதிர்ஷ்டவசமாக வீட்டில் ஆட்கள் இல்லாததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்டவில்லை.

தகவலறிந்த திருச்சி மாநகராட்சி உதவி பொறியாளர் இளம்வழுதி, உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது, “பழமையான கட்டிடமாக இருந்தாலும் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று விட்டு தான் மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 2 மாடி வீட்டை இடிப்பதற்கான நடவடிக்கை களை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x