Published : 26 Oct 2025 01:09 PM 
 Last Updated : 26 Oct 2025 01:09 PM
ரயிலில் ஏற்றி அனுப்புவதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள், ரயில் வேகன்கள் வராமல் 8 நாட்களாக சாலையிலேயே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளன.
கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 3 வட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் குறுவை அறுவடை நிறைவடைந்துள்ளது. சில இடங்களில் அறுவடை நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 80 லாரிகளில் ஏற்றப்பட்டு, ரயில் மூலம் அனுப்புவதற்காக கும்பகோணத்துக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், ரயில் வேகன்கள் வராதாதல், அந்த லாரிகள் அனைத்தும் திருநாகேஸ்வரம் புறவழிச் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மழை பெய்து லாரிகளில் உள்ள நெல் மூட்டைகளில் நாற்றுகள் முளைத்துவிட்டன. எனவே, போர்க்கால அடிப்படையில் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் கூறியது: கும்பகோணம் பகுதி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தார்ப்பாய் கொண்டு மூடி அக்.17-ம் தேதி ரயில் நிலையத்துக்கு வந்தோம். ஆனால், ரயில் வேகன்கள் வரவில்லை என அலுவலர்கள் கூறியதால் திருநாகேஸ்வரம் புறவழிச் சாலையில் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளோம். இதனிடையே, அண்மையில் பெய்த மழையில் ஓரமாக உள்ள நெல் மூட்டைகள் நனைந்து முளைவிட்டுள்ளன.
கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை மட்டுமே அண்மைக்காலமாக நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் ரயில் மூலம் ஏற்றி அனுப்பி வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், 8 நாட்களாக லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கேட்டபோது வெளி மாவட்டங்களுக்கு கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளை மட்டும் இயக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்கின்றனர். தொடர்ந்து, மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், லாரிகளில் உள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், 80 லாரிகளில் உள்ள 36 ஆயிரம் நெல் மூட்டைகள் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்றனர்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் கூறியது: ரயில் வேகன் வராததால் லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படவில்லை. அந்த லாரிகளில் உள்ள நெல் மூட்டைகள், அரைவைக்காக திருப்பூருக்கு அனுப்பப்பட உள்ளன. நெல் மூட்டைகளில் முளைத்துள்ள நாற்றுகளால், நெல்மணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT