Published : 26 Oct 2025 10:25 AM
Last Updated : 26 Oct 2025 10:25 AM
நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி போட்டியிட்டார். அப்போது பாஜக தலைவர்கள் சிலரே அவரை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்தனர். இந்தத் தகவல் டெல்லி வரைக்கும் போனதால், “எனது எளிமையான நண்பர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்ற செய்தி எனக்கு வந்தாக வேண்டும்” என, பிரதமர் மோடி கட்டளையிட்டார். இதனால் ஆடிப்போன பாஜவினர், உள்ளடிகளை ஓரங்கட்டிவிட்டு காந்திக்காக களப்பணி செய்து அவரைக் கரைசேர்த்தார்கள்.
இந்த நிலையில், “முதுமை காரணமாக எம்.ஆர்.காந்தி இம்முறை போட்டியிட விரும்பவில்லை” என்ற தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய நாகர்கோவில் பாஜக நிர்வாகிகள் சிலர், “81 வயதாகும் எளிமைக்கு பேர்போன எம்.ஆர்.காந்தி எதற்கும் கை நீட்டாதவர் என்பதால், அவருக்கு தொகுதியில் நல்ல பெயர் உள்ளது. அப்படி இருக்கையில் அவர் இம்முறை போட்டியிட மாட்டார் என திட்டமிட்டு வதந்தியை பரப்பி வருகின்றனர்” என்றனர்.
இதனிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை நாகர்கோவிலில் தான் போட்டியிடுவது அல்லது தனது ஆதரவாளரான முன்னாள் நாகர்கோவில் சேர்மன் மீனாதேவை நிறுத்துவது என்ற திட்டத்தில் இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
இதுபற்றி எம்.ஆர்.காந்தியிடம் கேட்டதற்கு, “பாஜக கூட்டணி பலமாகி வருவதால் பலரும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடவிரும்புகிறார்கள். என்னைப் பொறுத்தவரை தலைமை என்ன சொல்கிறதோஅதைச் செய்வேன். வயோதிகம் எனக்கொரு பொருட்டல்ல. தலைமை அனுமதித்தால் இந்த முறையும் போட்டியிட்டு ஜெயிப்பேன். நாகர்கோவில் மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT