Last Updated : 26 Oct, 2025 10:38 AM

1  

Published : 26 Oct 2025 10:38 AM
Last Updated : 26 Oct 2025 10:38 AM

ஆட்டையைக் கலைக்கும் ஆளுயர ஃபிரிட்ஜ்! - புது வழியில் புதுச்சேரி அரசியல்

சார்லஸ், நாராயணசாமி, கல்யாணசுந்தரம்

பிரியமானவர்கள் தீபாவளிக்கு பரிசு கொடுத்தால் யாராக இருந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், தேர்தலைக் கணக்கு வைத்து தீபாவளிக்காக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் அனைத்துக் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பிவைத்த ஆளுயர ஃபிரிட்ஜ்கள் புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

புதுச்சேரியில் முதல்வர் தொடங்கி நியமன உறுப்பினர்கள் உள்ளிட்ட 33 எம்எல்ஏ-க்களும் தீபாவளிக்கு தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு அரசு செலவிலேயே ஸ்வீட் பாக்ஸ்களையும் பட்டாசுகளையும் அனுப்பிவைப்பார்கள். ஆனால் இந்த முறை, மத்திய நிதி அமைச்சக செலவுத் துறையானது, பொது நிதியிலிருந்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பரிசுப் பொருட்களை வாங்கக் கூடாது என பிரேக் போட்டுவிட்டது. அதனால் ஆளுநர் கைலாஷ்நாதனும் இந்த முறை தீபாவளி பரிசுக்கான செலவுகளுக்கு அனுமதி தரவில்லை.

இந்தச் சூழலில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தனது பெயரில் இயங்கி வரும் ஜேசிஎம் அமைப்பின் மூலம் தீபாவளிக்காக அனைத்துக் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஆளுயர ஃபிரிட்ஜ்களை அன்பளிப்பாக இனிப்புகள், பட்டாசுகள் சகிதம் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த விநியோகத்தை எல்லாம் சார்லஸுக்காக பாஜக அமைச்சர் ஜான்குமாரே முன்னின்று செய்ததாகச் சொல்கிறார்கள்.

எம்எல்ஏக்களில் சிலர் சார்லஸ் அனுப்பிய அன்புப் பரிசை அப்படியே அவருக்கே திரும்பி அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவர் பாஜகவின் பி டீம் தான். பாஜக நிழலாகத்தான் அவரது மன்றம் செயல்படுகிறது. பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஜான்குமார், எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் சார்லஸ் மார்ட்டினுடன் இணைந்து செயல்படுகிறார்கள். ‘எங்களுக்கும் சார்லஸ் மார்ட்டினுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று சொல்லும் பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம், அவரோடு தொடர்பு வைத்திருப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்.

சார்லஸ் மார்ட்டின் தீபாவளிக்காக ஃபிரிட்ஜ் போன்ற காஸ்ட்லியான பரிசுகளை கொடுக்கிறார். என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து இதையெல்லாம் செய்யும் அவர் பாஜக எம்எல்ஏக்கள் இருக்கும் தொகுதிகளில் எந்தக் குழப்பமும் செய்வதில்லை. இதிலிருந்தே சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் பி டீம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது" என்று கொந்தளிக்கிறார்.

நாராயணசாமியின் ஆதங்கம் குறித்து பாஜக எம்எல்ஏ-வான கல்யாணசுந்தரத்திடம் கேட்டதற்கு, "தீபாவளிக்கு ஸ்வீட், பட்டாசு கொடுத்து கொண்டாடுவது இயல்பான விஷயம். அனைத்துக் கட்சியினரும் தான் பரிசு தருகிறார்கள். இதில் சார்லஸ் மார்ட்டின் தனது சக்திக்கு ஏற்ப ஃபிரிட்ஜ் கொடுத்திருக்கிறார். அவரது தந்தை நாடெங்கும் உள்ள பல கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார். திமுகவுக்கும் ரூ.700 கோடி தந்திருக்கிறார். மார்ட்டினிடம் தேர்தல் நிதி வாங்கிய திமுகவுடன் கூட்டணியில் இருக்கலாமா காங்கிரஸ் என்று நாங்கள் கேட்டால் நாராயணசாமி என்ன பதில் சொல்வார்?

சார்லஸ் மார்ட்டினின் பெயரில் இயங்கும் ஜேசிஎம் அமைப்புடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என எங்களுக்கு எங்களுடைய மாநிலத் தலைவர் எந்த உத்தரவும் போடவில்லை. தேவைப்பட்டால் சொல்லச் சொல்லுங்கள் நாராயணசாமிக்கும் ஒரு ஃபிரிட்ஜை வாங்கி அனுப்பி வைப்போம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x