Published : 26 Oct 2025 01:07 AM
Last Updated : 26 Oct 2025 01:07 AM
கோவை: கனிமவளக் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கனமழையால் டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் முளைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல, சம்பா பயிர்கள் மழையில் மூழ்கி நாசமாகி விட்டன. 6.5 லட்சம் ஏக்கர்குறுவை சாகுபடி நடைபெற்ற நிலையில், 18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்திருக்க வேண்டும். ஆனால், 5.5 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளனர். நெல் ஈரப்பதம் அதிகமானதால் வாங்க மறுக்கின்றனர். விவசாயிகள் மீது அக்கறை இல்லாத திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தென் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றதை நாடுவோம். நீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் 20 சதவீத ஏரிகள் மட்டுமே பயனடைந்துள்ளன. இந்த திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்.
திமுக அரசுக்கு நீர்மேலாண்மை குறித்து எதுவும் தெரியவில்லை. தமிழக அரசு கொண்டு வந்துள்ள தனியார் பல்கலை. திருத்த சட்டம் தவறானது. இதை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ராமதாஸ் குறித்து செய்தியாளர்கள் சில கேள்விகள் எழுப்பியபோது "அது எங்கள் உட்கட்சி விவகாரம்" என்று அன்புமணி பதில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT