Published : 26 Oct 2025 12:51 AM
Last Updated : 26 Oct 2025 12:51 AM
ராமநாதபுரம் / மதுரை: பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 28 முதல் 30-ம் தேதி வரை முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குரு பூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. வரும் 30-ம் தேதி அரசு சார்பில் நடைபெறும் விழாவில் காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
தொடர்ந்து, காலை 10 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளார். தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, தேவர் வாழ்ந்த வீட்டைப் பார்வையிடுவதுடன், தேவர் நினைவாலய அறங்காவலர் காந்திமீனாள் நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார். குடியரசு துணைத் தலைவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள ஹெலிபேட் தளத்தை புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ரத்தத்தில் கையெழுத்து இயக்கம்: பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் குருபூஜை விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக மதுரையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் சரவணன், மகேந்திரன், மாணிக்கம், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, குருபூஜையில் பழனிசாமிபங்கேற்க அழைப்பு விடுத்து ரத்தத்தில் கையெழுத்திடும் இயக்கத்தை ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT