Published : 26 Oct 2025 12:36 AM
Last Updated : 26 Oct 2025 12:36 AM
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்த கருத்துகள் வருத்தமளிப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை அமைச்சரின் பேச்சுதான் தனக்கு வருத்தமும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சட்டநாத கரையாளரின் 116-ம் ஆண்டு பிறந்தநாள் விழா, சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரியை என்னைக் கேட்டுதான் திறக்க சொல்லச் வேண்டும் என்று நான் கூறவில்லை. மக்கள் பிரதிநிதியாக இருக்கும் என்னிடம் தகவல் சொல்லி இருக்கலாம் என்று தான்கேட்கிறேன்.
அதிகாரிகளிடம் இதை கேட்பதை குற்றம் என்று சொல்வதா, என் மீது குற்றம் சுமத்த பார்க்கிறார்கள். மக்கள் பிரதிநிதியிடம் சொல்வது விதி இல்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். அவர்களுக்கு தகவல் கூற முடியாது என்றால், எதற்கு மக்கள் பிரதிநிதி பதவி, நாளைக்கே வேண்டுமென்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யட்டுமா, எங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இல்லையா?
ஊராட்சி மன்றத் தலைவர், திமுக ஒன்றிய செயலாளர், நகராட்சித் தலைவர், மாவட்டக் கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் எல்லோரும் பட்டியல் இனத்தவர்கள். அவர்கள் எல்லோரையும் ஏன் அழைக்கவில்லை என்றுதான்கேட்கிறோம். அதிகாரிகளால் திமுக ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறோம். அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதிகாரிகள் எதிர்வினை ஆற்றுவது எனக்கு வருத்தமாக உள்ளது.
எங்களுக்கு இருக்கிறதே சுயமரியாதை மட்டும்தான். மூத்த அமைச்சர் துரைமுருகன் நான் பேசியது வருத்தமாக இருக்கிறது என்று சொல்கிறார். அவர் இப்படி பேசியது எனக்கு வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், நான் போன் செய்தால் எடுப்பதில்லை. அவரிடம் பேசி 6 மாதங்கள் ஆகிறது. தொகுதி பிரச்சினை தொடர்பாக அமைச்சரிடம்தான் பேசி வருகிறேன். இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT