Published : 25 Oct 2025 04:43 PM
Last Updated : 25 Oct 2025 04:43 PM
திருச்சி: மத்திய உணவத்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுக்கள் நாமக்கல், கோவைக்கு திடீர் பயணம் மேற்கொண்டன.
மத்திய உணவுத்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த திடீர் உத்தரவால் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்த மத்தியக் குழுவினர் நாமக்கல், கோயம்புத்தூர் பகுதியில் இயங்கி வரும் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனர்.
இதனால் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களின் ஆய்வுப் பணிகள் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் விவசாயிகள் அறுவடை செய்து வரும் குறுவை நெல் பயிர்களை தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் நிலையான மற்றும் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து வருகிறது.
மத்திய உணவுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய உணவுக்கழம் நெல்லின் நிலையான ஈரப்பதம் 17 சதவீதம் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே மத்திய அரசு மானியம் வழங்கும். தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
அதை ஏற்று மத்திய அரசு தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய 3 குழுக்களை அமைத்துள்ளது. அந்தக்குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். ஒருக்குழு சென்னையில் ஆய்வு செய்து வருகிறது. திருச்சி, புதுக்கோட்டை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய உணவுத்துறை துணை இயக்குநர் ஆர்.கே.சஹி தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் சர்மா, தனுஜ் சர்மா அடங்கிய குழுவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய இணை இயக்குநர் பி.கே.சிங் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் சோபித் சிவாஜ், ராகேஷ் பரலா ஆகியோர் அடங்கிய குழுவினரும் நேற்று மாலை திருச்சிக்கு வந்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு குழுவினரும் இன்று திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய புறப்படுவதாக இருந்தது. ஆனால், நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு செய்ய மத்திய உணவுத்துறை அமைச்சகத்திலிருந்து வந்த உத்தரவை அடுத்து, ஆர்.கே.சஹி தலைமையிலான குழுவினர் நாமக்கல்லுக்கும், பி.கே.சிங் தலைமையிலான குழுவினர் கோயம்புத்தூருக்கும் திடீரென புறப்பட்டுச் சென்றனர்.
அக்குழுவினருடன் தமிழ்நாடு அரசு வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் செந்தில், மேலாளர் வி.ஜி.மணிகண்டன் ஆகியோரும் சென்றுள்ளனர். இதனால் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி, நகர், பூவாளூர், கோமகுடி, கொப்பவாளி ஆகிய திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வுப் பணிகள் நாளை (அக்.26-க்கு) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT