Published : 25 Oct 2025 10:30 AM
Last Updated : 25 Oct 2025 10:30 AM

மழை வெள்ளத்தில் கடும் சேதம்: பழைய குற்றாலம் அருவியில் குளிக்க தடை

பழைய குற்றாலம் அருவிக்கரையில் உள்ள தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன.

தென்காசி/ திருநெல்வேலி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 32 மி.மீ., அடவிநயினார் அணையில் 29 மி.மீ., செங்கோட்டையில் 24 மி.மீ., கடனாநதி அணையில் 16 மி.மீ., கருப்பாநதி அணையில் 19.50 மி.மீ., ஆய்க்குடியில் 12 மி.மீ., சிவகிரியில் 7 மி.மீ., ராமநதி அணை, தென்காசியில் தலா 3 மி.மீ. சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் 58 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 57.75 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 123.25 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பழைய குற்றாலம் அருவிக்கரை, பிரதான அருவிக்கரை பகுதிகளில் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்தன. இதனால் இந்த அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

குற்றாலம் பிரதான அருவிக்கரை பகுதியில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒரு சில நாட்களில் பணிகள் முடிந்துவிடும் என்றும் பேரூராட்சி தலைவர் கணேசன் தாமோதரன் கூறினார். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் பிரதான அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதேபோல் பழைய குற்றாலம் அருவி மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், “பழைய குற்றாலம் அருவிப் பகுதி வெள்ளத்தால் பெரும் சேதம் அடைந்துள்ளது. அருவியின் கீழ் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு வேலிகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. தடுப்புக்கு கீழ் உள்ள சுவரும் சேதமடைந்து காணப்படுகிறது. உடை மாற்றும் அறையின் கதவுகளும், கழிப்பறையின் கதவுகள் மற்றும் கோப்பைகளும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.

கழிப்பறைக்கு செல்லும் பைப் லைன் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அருவிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் காட்டாற்று வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் காணப்படுகிறது. மழைநீர் வடிந்த பின்பு தான் முழுமையான சேதம் மதிப்பு தெரியவரும். தற்போது தண்ணீர் அதிகமாக விழுவதால் சேத மதிப்பை கணக்கிட முடியவில்லை.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்தவுடன் தக்க பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தக்க பாதுகாப்புடன் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக அனுமதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. நேற்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக இங்குள்ள நாலுமுக்கு பகுதியில் 118 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் ஊத்து பகுதியில் 105, காக்காச்சியில் 80, மாஞ்சோலையில் 52 மி.மீ. மழை பெய்திருந்தது.

மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பதிவான மழையளவு (மி.மீட்டரில்) அம்பாசமுத்திரம்- 8.40, சேரன்மகாதேவி- 3, மணிமுத்தாறு- 9.20, நாங்குநேரி- 20, பாளையங்கோட்டை- 3, பாபநாசம்- 31, ராதாபுரம்- 29, திருநெல்வேலி- 1.80, சேர்வலாறு அணை- 11, கன்னடியன் அணைக்கட்டு- 10.60, களக்காடு- 16.40, கொடுமுடியாறு அணை- 43, மூலைக்கரைப்பட்டி- 5, நம்பியாறு அணை- 14.

பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் சாலையோரங்களில்
வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,847 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 98 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 97.26 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை மூடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x