Published : 25 Oct 2025 05:55 AM
Last Updated : 25 Oct 2025 05:55 AM
சென்னை: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.42.45 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் நேற்று திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் 58 ஏக்கர் கொண்ட அடையாறு உப்பங்கழியை சீரமைத்து, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ‘தொல்காப்பியப் பூங்கா’ உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஜன. 22-ம் தேதி இந்த பூங்காவை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்த பூங்காவை மேம்படுத்த கடந்த 2021 ஜூலையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.42.45 கோடியில் திறந்தவெளி அரங்கம், சிற்றுண்டியகம் உட்பட பல்வேறு நவீன வசதிகள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சி மூலம் சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் (Skywalk) மற்றும் டாக்டர் டிஜிஎஸ்.
தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்றுவழி பெட்டகக் கால்வாய் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 3.20 கி.மீ. தூரத்துக்கு நடைபயிற்சிப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்கா சீரமைப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்.1-ம் தேதி பார்வையிட்டார். பூங்காவில் மாணவர்களுக்காக பிரத்யேக சுற்றுச்சூழல் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யுமாறும், பூங்காவைப் பார்வையிடும் அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச்சத்து மிக்க சிற்றுண்டி வழங்கவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூங்காவைப் பார்வையிடும் நேரம், முன்பதிவு, நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT