Published : 25 Oct 2025 08:58 AM
Last Updated : 25 Oct 2025 08:58 AM
தமிழக தேர்தல் களத்தில் எத்தனை முனை போட்டி இருந்தாலும் நேரடிப் போட்டி என்பது பெரும்பாலும் இரு துருவ அரசியலை மையப்படுத்தியதாகவே இருக்கும். அப்படித்தான் முன்பு, காங்கிரஸ் - திமுக என்று இருந்த அந்த இரு துருவ அரசியலானது பிறகு திமுக - அதிமுக என உருமாறியது.
அந்த வகையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கலாம் என்று இப்போதைக்குச் சொல்லப்பட்டாலும் இரு துருவ அரசியலை, அதுவும் எதிர்ப்பு அரசியலை நோக்கியே தமிழக தேர்தல் களம் நகர்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம், இம்முறை இரு துருவம் என்பது திமுக - அதிமுக என்று இல்லாமல் திமுக எதிர்ப்பு - பாஜக எதிர்ப்பு என்று மாறி நிற்கிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமே தமிழகத்தில் பாஜக காலூன்றி விடக்கூடாது என்பதே முக்கிய அஜென்டாவாக இருக்கிறது. அதற்காக, கூட்டணிக்குள் சிறு சிறுசங்கடங்கள் ஏற்பட்டாலும் தொகுதிப் பங்கீடுகளில் அதிருப்திகள் எழுந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்டு பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றாக இணைந்துவிடுகின்றன அந்தக் கட்சிகள். 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி கடந்த மூன்று தேர்தல்களாக இந்தக் கட்சிகள் ‘பாஜக எதிர்ப்பு’ என்ற மந்திரத்தாலேயே கூட்டணிப் பாத்திரத்தை உடைந்துவிடாமல் பாதுகாத்து வருகின்றன.
பாஜக மதவாத அரசியல் செய்கிறது, மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்துக்கு தொடர்ச்சியாக துரோகம் இழைத்து வருகிறது என்பதை மட்டுமே திமுக கூட்டணி தங்களின் பிரதானப் பிரச்சாரமாக செய்துவருகிறது. அதற்கேற்ப இந்தக் கூட்டணிக்கு தமிழக மக்களும் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வருவதால், இந்தக் கூட்டணி இந்தத் தேர்தலுக்கும் பாஜக எதிர்ப்பு அங்கியையே தங்களுக்கான பாதுகாப்புக் கவசமாக எடுத்திருக்கிறது.
இவர்கள் இப்படி என்றால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டு மீண்டும் கைகோத்திருக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை உதறித் தள்ளிய அதிமுக, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டு இல்லை என்று அடித்துச் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னது. ஆனால், பாஜக தயவில்லாமல் திமுகவை சமாளிக்க முடியாது என்பதை 2024 தேர்தல் முடிவுகள் சொன்னதால் சத்தியத்திலிருந்து சைடு வாங்கிய அதிமுக, திமுக ஆட்சியை வீழ்த்த மீண்டும் பாஜகவுடன் அணி சேர்ந்திருக்கிறது.
கூடவே, திமுக ஆட்சியை அகற்ற நினைக்கும் அனைவரும் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அதிமுகவும் பாஜகவும் ஃபிளெக்ஸ் வைக்காத குறையாக மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இந்த விஷயத்தில், தங்களைத் தாக்கும் தவெகவையும் தாஜா செய்யத் தயாராக இருக்கிறது பாஜக.
ஒருவேளை, விஜய் அதிமுக கூட்டணிக்கு வராமல் தனித்துப் போட்டியிட்டாலும் அதுவும் திமுக எதிர்ப்பு என்பதையே மையப் புள்ளியாக கொண்டதாக இருக்கும். அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஓபிஎஸ்ஸும் மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் சென்றாலோ அல்லதுவிஜய்யுடன் கைகோத்தாலோ அதுவும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது என்ற இலக்கை நோக்கியதாகவே இருக்கும்.ஆக
மொத்தத்தில், 2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் களமானது பாஜக எதிர்ப்பு... திமுக ஆட்சி மீதான வெறுப்பு என்ற இரண்டு அம்சங்களை முன்வைத்தே அமர்க்களப்படப் போகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT