Published : 25 Oct 2025 09:56 AM
Last Updated : 25 Oct 2025 09:56 AM

ஸ்டாலினின் முன்னாள் விசுவாசியையே கொளத்தூருக்காக கூர்தீட்டுகிறாரா இபிஎஸ்?

முன்னாள் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியில் திமுக யாரை நிறுத்தப் போகிறது என்கிற எதிர்பார்ப்பைப் போலவே கொளத்தூர் தொகுதியிலும் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக யாரை நிறுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

2011-ல் கொளத்தூர் தொகுதி உதயமானதில் இருந்து ஸ்டாலின் தான் இந்தத் தொகுதிக்கு எம்எல்ஏ-வாக இருக்கிறார். 2011-ல் கொளத்தூரில் ஸ்டாலினும் அதிமுக தரப்பில் சைதை துரைசாமியும் மோதினார்கள். அடுத்த தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகரை வென்று எதிர்க்கட்சித் தலைவரானார் ஸ்டாலின். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஆதி ராஜாராமை விட 70,384 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஆட்சியை பிடித்து தமிழகத்தின் முதல்வரானார் ஸ்டாலின்.

ஏற்கெனவே, எம்ஜிஆரிடம் அரசியல் பழகிய சைதை துரைசாமியையும், ஜே.சி.டி.பிரபாகரையும் ஜெயலலிதாவிடம் அரசியல் படித்த ஆதி ராஜாராமையும் ஸ்டாலினுக்கு எதிராக நிறுத்தி தோற்றுப்போன அதிமுக, இம்முறை திமுகவின் ஒவ்வொரு அசைவையும் நன்கு அறிந்த வலுவான வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தில் இருக்கிறது. அந்தவகையில், புரசைவாக்கம் தொகுதி முன்னாள் திமுகஎம்எல்ஏ-வான வி.எஸ்.பாபுவை கொளத்தூரில் நிறுத்த அதிமுக தலைமை தனது முதல்கட்ட பரிசீலனையில் வைத்திருப்பதாகத் தெரிகிறது.

ஒரு காலத்தில் வட சென்னை திமுகவில் அசுர சக்தியாக இருந்தவர் தான் இந்த வி.எஸ்.பாபு. வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்த இவர், 2006 சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2011-ல் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உதயமானது. 2011-ல் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டதால் அப்போது வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும் கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் பாபு.

அந்த சமயத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பி.கே.சேகர்பாபு, புதிய வரவாக திமுகவுக்கு வந்தார். அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் 2011 தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு திமுகவிலிருந்து விலகிய வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது. இந்த நிலையில், 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக களப்பணி செய்ததாகக் கூறி, 2018-ல் வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதன் பிறகு அமைதிகாத்த பாபு, இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதும் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இப்போது, கொளத்தூர் தொகுதியை உள்ளடக்கிய வட சென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார் வி.எஸ்.பாபு. சீனியர் அரசியல்வாதி என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாபு, திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களை போட்டுத் தாக்கி வருவதுடன் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்தும் அப்டேட்களை அள்ளித் தந்து வருகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், ‘‘இவரை நிறுத்தினால் தான் ஸ்டாலினுக்கு சரியான போட்டியை ஏற்படுத்துவார் என்பதால் தான் வி.எஸ்.பாபுவின் பெயரை இபிஎஸ் பரிசீலனைக்கு எடுத்திருக்க வேண்டும். அதிமுகவின் செல்வாக்கான தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து அவர்களுக்கு அமைச்சரவையிலும் இடமளித்து கட்சியை வளர்த்து வருகிறது திமுக. அதுபோல் தான் ஒரு காலத்தில் திமுகவில் பவர்ஃபுல் சக்தியாக இருந்த பாபுவை சாய்ஸாக எடுத்திருக்கிறார் இபிஎஸ்” என்றார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x