Published : 25 Oct 2025 10:08 AM
Last Updated : 25 Oct 2025 10:08 AM
விஜய்க்கு திரும்பிய பக்க மெல்லாம் இளைஞர்கள் கூட்டம் திரள்வதை உள்வாங்கி இருக்கும் திமுக தலைமை, அதை சமாளிக்கும் விதமாக சொந்தக் கட்சிக்குள் இளைஞரணி தம்பிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏற்கெனவே ஒவ்வொரு பூத்துக்கும் இளைஞரணியைச் சேர்ந்த ஒருவரையும் தனிப்பட்ட முறையில் பாக முகவராக நியமனம் செய்திருக்கிறது திமுக. முன்பு ஒன்றிய, நகர,மாவட்ட அளவில் மட்டுமே இளைஞரணிக்கு பொறுப்பாளர்கள் இருப்பார்கள். அந்த நிலையை மாற்றி ஒன்றியங்களில் கிராமக்கிளை அளவில் இளைஞரணிக்கு ஒரு அமைப்பாளரும் 3 துணை அமைப்பாளர்களும் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.
இதேபோல் பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் இளைஞரணிக்காக ஒரு அமைப்பாளரும் 2 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதுபோலவே, நகரங்களில் ஒவ்வொரு வார்டுக்கும் இளைஞரணிக்கு ஒரு அமைப்பாளரும் 3 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். மாநகராட்சிகளில் ஒரு வட்டத்துக்கு இளைஞரணிக்காக ஒரு அமைப்பாளரும் 5 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணி பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தும் விதமாக கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 4 முக்கிய மண்டலங்களில் விரைவில் இளைஞரணி மண்டல மாநாடுகள் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது.
இதனிடையே, புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்ட இளைஞரணியினர் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த வயதைக் கடந்தவர்களையும், ஆக்டிவாக செயல்பட மாட்டார்கள் என்று தெரியவருபவர்களையும் நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். மண்டல மாநாட்டுக்கு முன்னதாக இதையெல்லாம் சரிசெய்து இறுதிப் பட்டியலை தயாரிக்க வேண்டும் என உதயநிதி கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறாராம்.
இதையடுத்து முதல் மண்டல மாநாடு நடைபெறும் கோயம்புத்தூர் மண்டலத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு தென்மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் நேரில் சென்று அங்குள்ள இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, ஆக்டிவாக செயல்படாத நபர்களையும் வயது வரம்பைக் கடந்தவர்களையும் கணக்கெடுத்து அவர்களை எல்லாம் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு தகுதியான நபர்களை பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து ஆய்வுக்குச் சென்ற தென் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “நாங்கள் ஆய்வுக்குச் சென்ற இடங்களில் பட்டியலில் உள்ள அனைத்து இளைஞரணி நிர்வாகிகளையும் நேரில் வரவழைத்துப் பேசினோம். அவர்களில் ஆர்வம் இல்லாதவர்களையும் வயது வரம்பைக் கடந்தவர்களையும் உடனடியாக மாற்றச் சொன்னோம். அவர்களுக்குப் பதிலாக புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களையும் ஆய்வு செய்தோம். மாநாடு கூடும்போது நான்கு மண்டலங்களிலும் திமுகவின் ஆக்டிவான இளைஞர் பட்டாளம் ஒன்று களத்துக்குச் செல்ல தயாராய் இருக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT