Published : 25 Oct 2025 09:41 AM
Last Updated : 25 Oct 2025 09:41 AM
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை’ தங்கள் ஆட்சியின் உன்னத திட்டங்களின் ஒன்றாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறது திமுக. சொன்னபடி, அனைத்து மகளிருக்கும் இந்தத் திட்டத்தின் பலனைத் தரவில்லை என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை வசைபாடினாலும், “தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும்” எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறது திமுக.
இந்த நிலையில், அரசு அண்மையில் அறிவித்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களிலும் ஏராளமான பெண்கள், ‘மகளிர் உரிமைத் தொகை’ கேட்டு மனு கொடுத்துவிட்டு தகவலுக்காகக் காத்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதால் இம்முறை, மனு கொடுத்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் என்றொரு பிரச்சாரமும் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ-வான அமைச்சர் பி.கீதாஜீவன் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தபால் மூலம் தனது தொகுதிமக்களுக்கு நினைவூட்டி முன்கூட்டியே வாக்குச் சேகரிக்கத் தொடங்கிவிட்டார்.
கடந்த சில நாட்களாக, தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெண் வாக்காளர்களை குறிவைத்து வீடு வீடாக தபால் ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகரதிமுக பெயரில் அனுப்பப்பட்டு வரும் இந்தத் தபாலில், ‘எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னத கொள்கையுடன் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவுக்கே வழிகாட்டும் மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற்றி வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டு பெண்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் மூலம் தாங்களும், தங்கள் குடும்பமும் பயன்பெற்று வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இதேபோன்று பல்வேறு திட்டங்களால் நாமும், நம் மக்களும் தொடர்ந்து பயன்பெற்றிட, மேலும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி நம் வாழ்வு மேம்பட, வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தந்து முதல்வர் ஸ்டாலினின் பொற்கால ஆட்சியை தொடரச்செய்யுமாறு தங்களை வேண்டிக்கேட்டுக் கொள்கிறோம்'என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT