Published : 25 Oct 2025 09:19 AM
Last Updated : 25 Oct 2025 09:19 AM
இந்த முறை எப்படியும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியே தீரவேண்டும் என்பதில் ஒரு முடிவோடு இருக்கும் பாஜக, அதற்காக சில சமரசங்களை செய்துகொள்ளவும் தயாராய் இருக்கிறது. முதலில், பொது எதிரியை வீழ்த்திவிட்டு அதன்பிறகு மற்ற எதிரிகளைக் ‘கவனித்துக்’ கொள்ளலாம் என்ற கணக்கில் இருக்கும் அந்தக் கட்சி அதற்காக, கொள்கை எதிரி என தங்களை விமர்சிக்கும் விஜய்யையும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சித்து வரும் நிலையில், பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
அதிமுக - பாஜக கூட்டணியை விட திமுக கூட்டணி வலுவாக இருக்கிறதே... எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?
மக்கள் திமுக அரசுக்கு எதிரான மன நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் எங்களுக்கான வாக்கு வங்கி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம், திமுக கூட்டணி கட்சிகள் தங்களுக்கு இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்பதுடன், ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அதனால், திமுக கூட்டணி வலுவாகவும் இல்லை; அவர்களுக்குள் ஒற்றுமையும் இல்லை. திமுகவுக்கு சாதகமாக இருப்பதாகச் சொல்லப்படும் சிறுபான்மையினர் வாக்குகளை இம்முறை விஜய் தன் பக்கம் இழுப்பார். அதனால் திமுகவின் வாக்கு வங்கி சரிவடையும். எனவே, எங்களது என்டிஏ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.
அதிமுக பல கூறுகளாக பிரிந்து கிடப்பதும், என்டிஏ கூட்டணியில் அதிமுக, பாஜகவை தவிர பிற வலுவான கட்சிகள் இல்லாததும் உங்கள் அணிக்கு பலவீனம் தானே?
ஜனவரியில் தங்களது கூட்டணி முடிவை அறிவிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். நிச்சயம் தேமுதிக என்டிஏ கூட்டணியில் தான் இணையும். அதேபோல், திமுகவுக்கு எதிரான மன நிலையில் இருக்கும் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோரும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனால் அவர்களும் நிச்சயம் என்டிஏ கூட்டணியில் தான் தொடருவார்கள். அதேபோல், ஓபிஎஸ்ஸும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தான் சொல்கிறார். டிடிவி தினகரனும் தொடர்பு கொள்ள முடியாத இடத்துக்குச் சென்றுவிட வில்லை. ஆகவே, அவர்களும் மீண்டும் எங்கள் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது.
தவெகவை என்டிஏ கூட்டணியில் இணைக்க பாஜக தரப்பிலிருந்து நேரடியான முயற்சிகள் ஏதும் எடுக்கப்படுகிறதா?
தேர்தல் களத்தில் பிரதான எதிரியை வீழ்த்த வேண்டுமானால், வாய்ப்பு இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் கூட்டணியில் இணைப்பதற்கு யாராக இருந்தாலும் முயற்சிகளை மேற்கொள்ளத்தான் செய்வார்கள். அதன்படி, வெற்றிக்கான எல்லா முயற்சிகளையும் பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிப்பதை வைத்து விஜய்யை பாஜக நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் சொல்கின்றனவே..?
சாத்தான்குளம் தந்தை, மகன் கஸ்டடி மரணம், திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கஸ்டடி மரணம் உள்ளிட்ட பல வழக்குகளில் முதல்வர் ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறார். ஆனால் அதுவே கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், விஜய்யை பாஜக மிரட்டிப் பார்க்கிறது என எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். சிபிஐ விசாரணை என்பது விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்காக அல்ல... கரூர் சம்பவத்தில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான்.
இப்போதெல்லாம் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அண்ணாமலை பெரும்பாலும் தவிர்த்து வருகிறாரே ஏன்?
அண்ணாமலை ஒரு வலிமையான தலைவர். நயினாரும் அண்ணாமலையும் பாஜகவின் ராம - லட்சுமணராக இருந்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவின் வெற்றிக்கு அண்ணாமலை அயராது பாடுபடுவார். கட்சியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு தான் வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT