Published : 25 Oct 2025 06:11 AM
Last Updated : 25 Oct 2025 06:11 AM
தஞ்சாவூர்: ஆய்வுக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம், வயலில் சாய்ந்து முளைவிட்ட நெற்கதிர்களைத்தான் காண்பித்தேன் என்று தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் விவசாயி விளக்கம் அளித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களையும், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி முளைவிட்டுள்ள நெல்மணிகளையும் பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த 22-ல் தஞ்சாவூருக்கு வந்தார்.
காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அவர் ஆய்வு செய்தபோது, வரவுக்கோட்டையைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண் விவசாயி, தனது வயலில் அழுகிய நெற்கதிர்களையும், அதில் முளைத்த நெல்மணிகளையும் பழனிசாமியிடம் காண்பித்து, தனது வேதனையைத் தெரிவித்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகளை வேகன்களில் அனுப்பும் பணியைப் பார்வையிட வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொய்யான தகவல்களை கூறியுள்ளதாகவும், அவரிடம் நெல்மணிகள் முளைத்துள்ளதை காட்டிய பெண் (பூங்கொடி) குத்தகை சாகுபடி செய்து வருபவர் என்றும், அவர் இன்னும் அறுவடை பணியையே மேற்கொள்ளாதபோது, அவர் எப்படி நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வரவுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி பூங்கொடி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: நான் 5 ஏக்கரில் குத்தகை சாகுபடி செய்து வருகிறேன். தற்போது அறுவடை செய்யும் தருவாயில் உள்ள குறுவை நெற்கதிர்கள், அண்மையில் பெய்த மழையில் நனைந்து வயலிலேயே சாய்ந்து முளைவிடத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், காட்டூர் கொள்முதல் நிலையத்துக்கு பழனிசாமி வருவதாகக் கூறியதால், விவசாயிகள் அங்கு சென்றோம். அப்போது நான், எனது வயலில் மழையில் அழுகிய மற்றும் நெல்மணிகள் முளைவிட்ட நெற்பயிரை பழனிசாமியிடம் காண்பித்து, பாதிப்பு குறித்து தெரிவித்தேன். நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்த நெல்மணிகள் முளைத்துவிட்டதாக நான் கூறவில்லை. பின்னர், வேளாண்மை, வருவாய்த் துறை அதிகாரிகள் எனது வயலைப் பார்வையிட்டனர்.
அப்போது வயலிலேயே முளைவிட்ட நெற்கதிர்களை படம் பிடித்தனர். நான் ரூ.1.5 லட்சம் செலவு செய்து சாகுபடி செய்தேன். தற்போது அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடையை முடித்து, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, மழையில் ஒழுகும் கூரை வீட்டை சரி செய்ய வேண்டும் என்று கருதியிருந்தேன். ஆனால், மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்துள்ளதால், வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT