Published : 25 Oct 2025 01:32 AM
Last Updated : 25 Oct 2025 01:32 AM
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக லாம் என்பதால், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தேர்தல் துறை கூறியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்ஐஆருக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். அதற்காக தயார் நிலையில் உள்ளோம். அறிவிக்கப்பட்டதும் முதல்கட்டமாக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரி நிலையில் அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடத்தப்படும். வழக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் போல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது. சிறப்பு முகாம்களும் கிடையாது.
இதற்கான புதிய வழிகாட்டுதலை ஆணையம் வெளியிடும். இந்த எஸ்ஐஆரின்போது இந்தாண்டு ஜனவரியில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல், 2002-03-ல் வெளியான வாக்காளர் பட்டியல் ஆகியவை அடிப்படையில் பணிகள் நடைபெறும். 2002-03-க்கான பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 68,467 வாக்குச்சாவடிகள் உள்ளன. இனி 1,200 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுவதால், இதன் எண்ணிக்கை 75,050 ஆக உயரும். எஸ்ஐஆர் தொடங்கப்பட்டதும், வீடுவீடாகச் சென்று விண்ணப்ப படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள்வழங்குவார்கள். இதற்காக 90 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். படிவங்களை பூர்த்தி செய்து, அலுவலர்கள் மீண்டும் வரும்போது வழங்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன், இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று மற்றும் ஆதார் எண்ணை வழங்கலாம்.
எஸ்ஐஆரின்போது, இறந்த வர் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்கள் நீக்கப்படும். இப்பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரியில் வெளியாகும். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் அதற்கான நோட்டீஸ் வழங்கப்படும். அப்போது, ஆணையம் தெரிவிக்கும் ஆதார ஆவணங்களை சமர்ப்பித்து மீண்டும் பெயரை சேர்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT