Published : 24 Oct 2025 07:16 PM
Last Updated : 24 Oct 2025 07:16 PM
திருப்பத்தூர்: “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை தவெக விஜய் ஏற்றுகொள்வது தற்கொலைக்கு சமம்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
விடுதலை போராட்ட வீரர்கள் மருதுசகோதரர்கள் நினைவுதினத்தில் இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து, மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
2026 தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. அமமுக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கூட்டணி குறித்து தெரிவிப்போம். எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று தான் கூறினேன். விஜய் கூட்டணிக்கு செல்வோம் என்று நான் சொல்லவே இல்லை. அரசியலில் அனுபவத்தை விட, மக்கள் யாரை ஏற்று கொள்கின்றனர் என்பதுதான் முக்கியம். அரசு சரியாக செயல்பட்டால் வரவேற்பதும், சரியில்லை என்றால் எதிர்த்து குரல் கொடுப்பதும் எங்களது கொள்கை.
பழனிசாமியும், அவரை சேர்ந்தோரும் தமிழகத்தில் பரிதாபநிலையில் உள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்று இல்லை. பழனிசாமி அதிமுகவாக உள்ளது. அவரால் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும், எங்களோடு கூட்டணிக்கு வாங்கள் என்று மற்றவர்களை அழைப்பதை தமிழக மக்கள் நகைப்பாக பார்க்கின்றனர். காலில் விழுந்து பதவி பெற்றுவிட்டு காலை வாரியவர் பழனிசாமி. பழனிசாமி துரோகத்துக்கு அவர் வீழ்த்தப்படுவார்.
தேர்தல் நேரத்தில் வியப்பை ஏற்படுத்தும் வகையில் கூட்டணிகள் அமையும். ரஜினியை போன்று விஜய் உச்ச நடிகர். வருமானத்தை விட்டு, மக்களுக்கு சேவை செய்ய வந்த அவர், தனது தலைமையில்தான் கூட்டணி அமைப்பார். ஆனால் கூவிக் கூவி அழைக்கும் பழனிசாமியை தோளில் தூக்கி வைத்துக்கொள்ள மாட்டார் விஜய். பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுகொள்வது தற்கொலைக்கு சமம்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT