Published : 24 Oct 2025 02:44 PM
Last Updated : 24 Oct 2025 02:44 PM
சென்னை: சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மறைவையொட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மலையில இருந்து கொஞ்சம் தேனும் பழமும் எடுத்துட்டு வந்திருக்கேன். உங்களை குறிஞ்சி இல்லத்தில் சந்திச்சு கொடுக்கணும்!’ – சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த அண்ணன் பொன்னுசாமி ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளில் இப்படித்தான் என்னை எதிர்கொள்வார். அப்படி கடந்த வாரம் சட்டமன்றத்தில் சந்தித்த அவருக்கு இந்த வாரம் அஞ்சலி செலுத்துவேன் என நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை.
எளிமையும் அமைதியும்தான் பொன்னுசாமியின் அடையாளம். ஆடம்பரம் இல்லாதவர், அதிர்ந்து பேசாதவர். நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த கொல்லிமலைதான் அவரின் சொந்த ஊர். அந்த மலை மீதும் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். கொல்லிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 14 ஊராட்சிகளும் ‘குண்டனி நாடு’, ‘குண்டூர் நாடு’, ’ஆலத்தூர் நாடு’, ‘வாழவந்தி நாடு’ என தனித்தனி நாடுகளாக அழைக்கப்படுகின்றன. அதில் பொன்னுசாமி, வாழவந்தி நாட்டில் சோளக்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர்.
சோளக்காடு பேருந்து நிலையம் அருகில் பழக்கடை நடத்தி வந்தவருக்கு, அதுதான் அவரின் வாழ்வாதாரமாகவும் இருந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் ஆனப்பிறகும்கூட தினமும் அந்தக் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்வதையும், மக்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார் என்கிறார்கள். அதுவும் அன்னாசிப் பழத்தை தோல் சீவி, நறுக்கி, மிளகாய்ப்பொடி போட்டுத் தரும் அவரின் வேகத்தை சிலாகிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
என்னை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், ‘சேந்தமங்கலம் தொகுதிக்காக முதல்வர் இந்தந்த விஷயங்களைச் செய்திருக்கார். நீங்க இதையெல்லாம் செய்துகொடுங்க’ என்று உரிமையோடு மனுக்களை அளிப்பார். முதல்வரிடம் பேசி, தன் தொகுதிக்கு ஒரு தொழில் பயிற்சி நிலையம், கொல்லிமலையில் ஒரு இரத்த வங்கி, மிளகு பதப்படுத்தும் தளம்... என பல திட்டங்களை அங்கு கொண்டுவந்துள்ளார். நாமக்கல் – துறையூர் பிரதான சாலையை 40 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணியைத் தொகுதிக்காக முடித்துத் தந்துள்ளார்.
சேந்தமங்கலம் தொகுதியின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், என்னிடம் அளித்த மனு தற்போது ரூ.400 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர்த் திட்டமாக செயல்வடிவம் பெற உள்ளது. பழங்குடி மக்கள் 500 பேருக்கு தனித்தனி வீடுகள் கட்ட அனுமதி பெற்று வேலைகள் தொடங்க உள்ளன. இப்படி தன் தொகுதி மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்தான் பொன்னுசாமி.
தன் பேரனின் திருமண மேடையில்கூட, தொகுதிக்கான கோரிக்கையை என்னிடம் அளித்தார். அண்ணனின் பேரன் திருமணத்தைக் கடந்த 2023-ல் சேந்தமங்கலத்தில் நான்தான் நடத்தி வைத்தேன். ‘நீங்க கேக்குற தேதியில சென்னையில நிறைய வேலை இருக்குண்ணே’ என்றேன். ‘இந்த் தேதினு கிடையாது. நீங்க எந்தத் தேதி கொடுத்தாலும் அந்தத் தேதியில கல்யாணத்தை வெச்சுக்குறேன்’ என்று விடாப்பிடியாக நின்று திருமணத்தை நடத்திவைக்க என்னை சேந்தமங்கலம் அழைத்துச் சென்றார்.
இன்று போலவே அன்றும் ஒட்டுமொத்தத் தொகுதி மக்களும் மணப் பந்தலில் கூடியிருந்தனர். ‘திருமணத்தை நடத்தித்தர ஒப்புக்கொண்டதுபோல தன் துறையில் இருந்து எங்கள் தொகுதிக்கான மினி ஸ்டேடியத்தையும் இங்கே அமைத்துத் தந்தால் மகிழ்வோம்’ என்றார்.
‘இந்த கோரிக்கைக்காகவே அண்ணன் என்னை இங்கே அழைத்திருக்கிறார் என நினைக்கிறேன். சேந்தமங்கலத்தில் மினி ஸ்டேடியம் நிச்சயம் அமைக்கப்படும். இதுதான் இந்தத் திருமணத்துக்கு முதல்வர் அளிக்கும் அன்புப் பரிசு’ என்று அன்று நான் வாழ்த்துரை ஆற்றியது நினைவுக்கு வருகிறது. சட்டமன்ற உறுப்பினராக மட்டுமின்றி மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவராகவும் மாவட்ட மக்களுக்கு பணியாற்றி வந்திருக்கிறார். அதேபோல மாவட்டக் கழக துணைச் செயலாளராகவும் இருந்து தீவிரமாக கழகப் பணியாற்றியவர் பொன்னுசாமி.
அவரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான கொல்லிமலையிலேயே இன்று மதியம் அரசு மரியாதையுடன் அண்ணனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. யாருக்கும் தீங்கு நினைக்காத, எளிய மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அண்ணன், அவர் எப்போதும் எனக்குத் தரும் சுத்தமான மலைத் தேன் - பழங்களின் சுவையைப்போல, அந்த மலையைப்போல காற்றைப்போல என்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டு இருப்பார். அவரின் கழகப் பணி, மக்கள் பணி இம்மண்ணில் என்றென்றும் நிலைத்திருக்கும். அண்ணன் பொன்னுசாமி அவர்களின் புகழ் ஓங்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT