Published : 24 Oct 2025 12:13 PM 
 Last Updated : 24 Oct 2025 12:13 PM
சென்னை: "அதி கனமழையால் முல்லைப் பெரியாறு அணை பாசன பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள நெற் பயிர் மற்றும் தோட்டப் பயிர்களைக் கணக்கீடு செய்து தமிழ்நாடு அரசு இழப்பீட்டு நிதி உதவி வழங்கிட உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வயல்வெளி மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் நீர் புகுந்து பெரிதும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்து, 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக கனமழை பெய்ததால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள மலைக் கிராம ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அதிக கனமழை பெய்ததால், முல்லைப் பெரியாற்றில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீருடன், சிற்றோடைகளின் நீரும் கலந்து முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரப் பகுதியிலும், பாசனப் பகுதியில் உள்ள அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள், காய்கறிகள் நீரில் மூழ்கி பாதிப்பு அடைந்திருக்கின்றன. வாழைத் தோட்டங்கள், தென்னந் தோப்புகள் நீரால் சூழப்பட்டுள்ளன.
சின்ன வாய்க்கால், உத்தமமுத்து வாய்க்கால், மற்றும் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், உப்புக்கோட்டை, பாலார்பட்டி கூழையனூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வயல்களில் புகுந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி இருக்கின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, மழை மற்றும் முல்லைப் பெரியாற்று வெள்ள நீரால் சேதமடைந்துள்ள நெற் பயிர் மற்றும் தோட்டப் பயிர்களைக் கணக்கீடு செய்து தமிழ்நாடு அரசு இழப்பீட்டு நிதி உதவி வழங்கிட உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த வாய்க்கால் கரைகளை செப்பனிட்டு சீர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT