Published : 24 Oct 2025 06:22 AM
Last Updated : 24 Oct 2025 06:22 AM
சென்னை: சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடியை ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து, தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்தனர்.
இதை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, ஆக.14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்குவது உள்ளிட்ட 7 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தனியார் நிறுவனம் மூலமாக தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு அளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் செயற்குறிப்பு ஒன்றை தயாரித்து, நிதி ஒதுக்கக்கோரி தமிழக அரசுக்கு அனுப்பி இருந்தது. அதில், “சென்னை மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் நிரந்தரமாகவும், தனியார் மூலமும் 29,455 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு 512 இடங்களில் 3 வேளை உணவு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.186 கோடி செலவாகும். அந்த தொகையை 6-வது மாநில நிதி ஆணைய மானியத்திலிருந்து வழங்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநகராட்சியின் செயற்குறிப்பை கவனமுடன் பரிசீலித்த அரசு, தூய்மைப்பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 3 வேளை உணவு வழங்க ரூ.186 கோடி வழங்க அண்மையில் நிர்வாக அனுமதி அளித்துள்ளது. மேலும், அனைத்து உணவுகளும் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு நிறுவனம் சான்றளித்த சமையல் அறையில் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைளையும் அரசு விதித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT