Published : 24 Oct 2025 07:19 AM
Last Updated : 24 Oct 2025 07:19 AM
சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடியில் 4-வது ரயில் பாதை திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் பெரும்பாலான ரயில்கள் செங்கல்பட்டு வழியாக செல்கின்றன. தினசரி 60-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ஆனால், இத்தடத்தில் 3 பாதைகள் மட்டுமே உள்ளன. கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, 4-வது புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே அமைச்சகத்திடம் தெற்கு ரயில்வே வழங்கியது.
இந்நிலையில், தற்போது இத்திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவு ரூ.757.18 கோடியில், 4-வது பாதை அமைக்க திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில், தாம்பரம் - செங்கல்பட்டு பிரதான பாதை. இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. தற்போது, இத்தடத்தில் பயணிகளின் பயன்பாடு 87 சதவீதமாக உள்ளது, 4-வது ரயில்பாதை திட்டம் நடைமுறைக்கு வரும்போது, பயணிகளின் பயன்பாடு 136 சதவீதமாக உயரும்.
பயணிகள் நெரிசல் குறையும். இது, மின்சார ரயில் சேவையை செங்கல்பட்டு வரையில் நீட்டிக்கவும் உதவும். தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் அதிகரிக்கும் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமையும். மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் பெரிதும் உதவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வரவேற்பு: புதிய வழித்தட திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்ததற்கு, ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT