Published : 24 Oct 2025 10:06 AM
Last Updated : 24 Oct 2025 10:06 AM
புதுச்சேரியில் கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையில் பாஜக, அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும், காங்கிரஸ் தலைமையில் திமுக, இடசாரிகள் - விசிக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. இரு அணிகளிலும் வாய்ப்புக் கிடைக்காத சீனியர்கள் சிலர் சுயேச்சையாக களம் இறங்கினர். அவர்களில் சிலர் வெற்றியும் பெற்றனர்.
இந்த நிலையில், என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணிகளுக்குப் போட்டியாக இம்முறை புதிது புதிதாக இன்னும் சிலரும் களத்துக்கு வந்திருக்கிறார்கள். பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்களும் பாஜக எம்எல்ஏ-க்கள் சிலரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸுடன் கைகோத்து செயல்பட்டு வருகிறார்கள். பாஜக தலைமையில் இருந்து இதற்கு எவ்வித ரியாக்ஷனும் காட்டப்படாத தால் இதை, ‘பாஜகவின் பி டீம்’ என்று விமர்சிக்கிறார்கள். அதேசமயம், கூட்டணிக்கு விரோதமாக இவர்கள் இப்படி தனி அணி திரட்டுவது என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தை சீண்டி வருகிறது.
இதேபோல், சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு மற்றும் பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ-வான சாமிநாதன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் சேர்ந்து தனியாக ஒரு அணியை உருவாக்கி வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில், புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ், கடற்கரையை ஒட்டியுள்ள 5 தொகுதிகளில் தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து வேட்பாளர்களை நிறுத்தும் வேலைகளில் இறங்கி இருக்கிறார். இப்படி புதுச்சேரி தேர்தல் களத்தைக் குறிவைத்து இதுவரை 5 அணிகள் களத்துக்கு வந்திருக்கின்றன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மொத்த வாக்களர்கள் எண்ணிக்கையே சுமார் 10.15 லட்சம் தான். அப்படிப் பார்த்தால் பதிவாகும் வாக்குகளை வைத்து கணக்கிட்டால் ஒரு தொகுதிக்கு சராசரியாக சுமார் 30 ஆயிரம் வாக்குகள் விழலாம். இதில், ஒரு தொகுதியில் பலமான வேட்பாளர்கள் 6 பேர் நின்றாலே வாக்குகள் பிரிக்கப்படும். அதனால் இம்முறை, எப்பாடு பட்டாவது சுமார் 6 ஆயிரம் வாக்குகளை பெற்றாலே அடித்துப் பிடித்து எம்எல்ஏ ஆகிவிடலாம் என்ற கணக்கில் பலரும் இப்போது தங்களுக்கு வாகான தொகுதிகளில் வாக்காளர்களை ‘ஸ்கெட்ச்’ போட்டு கவனித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT