Published : 24 Oct 2025 10:11 AM
Last Updated : 24 Oct 2025 10:11 AM
தேர்தல் பணிகளில் எந்தவித சுணக்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு குழுக்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது திமுக தலைமை. இந்த நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் மண்டலப் பொறுப்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ளன. இதில், ஆளும்கட்சியான திமுக கடந்தாண்டே தேர்தலுக்காக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது. இந்தக் குழுவானது மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, நிர்வாகிகள் நியமனம், மாவட்டங்கள் பிரிப்பு உட்பட பல்வேறு பரிந்துரைகளை தலைமைக்கு அக்குழு அளித்தது.
அதன்படி கட்சியில் சில அதிரடி மாற்றங்களையும் திமுக தலைமை மேற்கொண்டது. மாநிலத்தை 8 மண்டலங்களாக பிரித்து மண்டலப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதி வாரியாக திமுகவினரை சென்னைக்கே அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தச் சந்திப்புகளின் போது, தொகுதி நிலவரம், உட்கட்சி பூசல்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து வருகிறார் ஸ்டாலின்.
இந்த நிலையில், தேர்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்ட மண்டலப் பொறுப்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் ஆங்காங்கே மோதல்கள் வெடித்து அதுஉச்சமடைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் பணிகளை தாண்டி இதர விவகாரங்களிலும் மண்டலப் பொறுப்பாளர்கள் தலையிடுவதாக மாவட்டச் செயலாளர்கள் சிலர் கொந்தளிப்பில் இருக்கின்றனர். அதேசமயம், “உள்ளூர் சிக்கல்களை கையில் எடுக்காமல் தேர்தலில் எப்படி வெற்றி பெறமுடியும்... மாவட்டச் செயலாளர்கள் ஒழுங்காக வேலைசெய்தால் நாங்கள் ஏன் தலையிடப்போகிறோம்? என மண்டலப் பொறுப்
பாளர்களும் பொருமுகின்றனர்.
இருதரப்புக்குமான இந்த உரசல்கள் கட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறிவருகிறது. அமைப்பு ரீதியாக தற்போது திமுகவில் 76 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள், 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில்லாமல், தேர்தலுக்காக 8 மண்டலப் பொறுப்பாளர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இத்தனையும் போதாதென திமுக எம்.பி-க்களுக்கும் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்படி, மாவட்டச் செயலாளர், பொறுப்பு அமைச்சர், தொகுதி பொறுப்பாளர், மண்டலப் பொறுப்பாளர், கண்காணிப்பாளர், இளைஞரணி நிர்வாகி என நாட்டாமைகளின் பட்டியல் நீள்வதால் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளை ஒருமுகமாக தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த முடியாத இக்கட்டில் தவிக்கிறது திமுக.
குறிப்பாக, மதுரையில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் தளபதி, மணிமாறன் ஆகியோரைத் தாண்டி மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் தங்கம் தென்னரசால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை இருப்பதாகச் சொல்கிறார்கள். இதேபோல் கொங்கு மண்டலப் பொறுப்பாளரான செந்தில் பாலாஜிக்கும் கொங்கு அமைச்சரான முத்துசாமிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப்போகவில்லை. வேலூரில் மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலுவின் வருகையை சீனியர் அமைச்சரான துரைமுருகனின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
தெற்கில் துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழியின் ஆதிக்கத்தை மீறி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் நிர்வாகிகளும் பொறுப்பு அமைச்சர்களும் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்க, மண்டலங்களை கவனிக்கும் இரண்டு அமைச்சர்கள், சரிவர தங்கள் பணியைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் தலைமையின் கவனத்துக்கு வந்திருக்கிறது. இவர்களுக்கு மத்தியில், அமைச்சர்கள் சி.வி.கணேசனுக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் ‘ஒத்துழையாமை’ இயக்கமானது கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தே கவலைப்பட வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மையில் சென்னையில் உள்ள தொகுதி ஒன்றின் நிர்வாகிகளை அழைத்து முதல்வர் பேசிய ‘உடன் பிறப்பே வா’ நிகழ்வில் முதல்வரையும் வைத்துக் கொண்டே அமைச்சர் ஒருவரும் மண்டலத்துக்குப் பொறுப்பானவரும், ‘இதெல்லாம் என்னோட ஏரியா உள்ளே வராதே’ என்ற ரேஞ்சில் காரசாரமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். சிட்டிங் எம்எல்ஏ-வுக்கு மீண்டும் சீட் வழங்குவது தொடர்பாக நடந்த இந்த மோதலைப் பார்த்துவிட்டு ஸ்டாலினே வெறுத்துப் போய் இருக்கையை விட்டு எழுந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கட்சித் தலைவர் முன்னிலையிலேயே காரசாரமாக மோதிக் கொள்ளுமளவுக்கு உக்ரமாகி விட்ட உட்கட்சி பூசல்கள் தேர்தலில் திமுகவின் வெற்றியை சோதித்துவிடுமோ என்பது தான் இப்போது உடன்பிறப்புகளின் உண்மையான கவலையாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT