Published : 24 Oct 2025 06:13 AM 
 Last Updated : 24 Oct 2025 06:13 AM
ராமநாதபுரம்: கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பகுதி மானாவாரியாக உள்ளதால், மழையையும், வைகை நீரையும் நம்பி ஆண்டு தோறும் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல்லும், 45 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மிளகாயும் பயிரிடப்படுகின்றன. கடந்த 16-ம் தேதி முதல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடந்த 19-ம் தேதி முதல் 2 நாட்கள் கனமழை பெய்தது. இதனால் வயல்வெளிகளில் குளம்போல தண்ணீர் தேங்கிஉள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, திருஉத்தரகோச மங்கை அருகேயுள்ள நல்லாங்குடி, களக்குடி, பனைக்குளம், எக்ககுடி பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர் நீரில் மூழ்கியது. ராமநாதபுரம் அருகேயுள்ள சூரங்கோட்டை, ஆர். காவனூர், முதுனாள், தொருவளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது.
அதேபோல, மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மானாங்குடி, கடுக்காய்வலசை, மேலமண்குண்டு, கீழமண்குண்டு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது.
முதுகுளத்தூர் அருகேயுள்ள தாழியரேந்தல், மட்டியரேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் நெல் வயல்களிலும், மிளகாய் வயல்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. விவசாயிகள் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் வேதனையில் உள்ளனர். இந்த வயல்களில் தண்ணீர் வடிந்ததும் மீண்டும் நெல் அல்லது மிளகாய் விதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மானாங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவர் பரமேஸ்வரி கூறும்போது, “எங்கள் ஊராட்சிப் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளோம். வயல்களில் மழைநீர் தேங்கி, நெற்பயிர் அனைத்தும் மூழ்கியது. இதனால், மீண்டும் விதைக்க விதை நெல்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
இழப்பீடு வழங்க வேண்டும்: சூரங்கோட்டை விவசாயி ஸ்டாலின் கூறும்போது, “மழை விட்டு 2 நாட்களாகியும் மழைநீர் வடியாமல் வயல்வெளிகளில் தேங்கி நிற்பதால், நெற்பயிர் அழுகி வருகிறது. மழைநீர் வெளியேற முடியாமல் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT